பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

வேங்கடம் முதல் குமரி வரை

மல்லனும் கூட. பெரிய பெரிய மல்லர்களை யெல்லாம் யுத்தத்தில் வீழ்த்தியவன் ஆனதினாலே மாமல்லன் என்ற விருதுப் பெயரும் பெறுகிறான். இந்த மாமல்லன் ஆதரவில் உருவாகிய சிற்பக் கூடத்தையே, அன்று அதை உருவாக்கிய சிற்பிகள் மாமல்லபுரம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த மாமல்லபுரத்தையே திருமங்கை மன்னர் கடல் மல்லை என்று பாடியிருக்கிறார்.

மல்லபுரம் மல்லை ஆனது வியப்பில்லை. ஆனால் மகாபலிபுரம் ஆகிவிட்டதே, அதுதான் வியப்புக்குரியது. இதைவிட வியப்புக்குரியது, இத்தனை விவரமும் தெரிந்த இந்த நாளிலே லக்ஷக்கணக்கான பணத்தைச் செலவு செய்து, விருந்தினர் விடுதி கட்டும் சர்க்கார் கூட அந்த மகாபலியை விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு, 'மகாபலிபுரம் விருந்தினர் விடுதி' என்று சமீபகாலம் வரை பெயர் வைத்திருந்ததுதான். போகட்டும். மகாபலியின் பெயராலேயாவது மகாமல்லனது புகழ் நின்று நிலவினால் சரிதான்.

இன்று இப்பிரசித்தி பெற்ற மாமல்லபுரத்துக்கே போகலாம். இங்குள்ள கற்பாறைகள் சொல்லும் கதைகளையும், அவை விவரிக்கும் கலைச் செல்வங்களையும் பற்றித் தெரிவதற்கு முன்பு, இங்குள்ள பிரதான கோயிலையும், அங்கு கோயில் கொண்டிருக்கும் தலசயனரையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

மகாவிஷ்ணு நிற்பார், இருப்பார், கிடப்பார் என்பதை அறிவோம். இதில் அவரது சயனத் திருக்கோலமே நிரம்பவும் வசீகரமானது. கிட்டத்தட்ட இருபத்து ஏழு தலங்களில் அவர் சயனித்திருக்கிறார். அந்தச் சயனத்தில்தான் எத்தனை எத்தனை வகை. இருபதுக்கு மேற்பட்ட இடங்களிலே அவர் சயனித்திருப்பது ஆதிசேஷன் பேரிலே தான். இதனையே புஜங்க சயனம் என்பர். மற்றவையெல்லாம் உத்தியோக