பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

205

சயனம், தர்ப்ப சயனம், போக சயனம், மாணிக்க சயனம், வட பத்ர சயனம், வீர சயனம் என்பனவாம்.

இதையெல்லாம் விட்டு விட்டு ஓரிடத்திலே தரையிலேயே படுத்துக் கொள்கிறார். அதனைத் தலசயனம் என்றே சொல்கிறார்கள். அப்படிப் படுக்கப் பாயோ, தலைக்கு அணையோ இல்லாமல், சும்மா தரையிலேயே கிடக்கிறவர்தான் தலசயனப் பெருமாள். அப்படிக் கிடக்கும் இடம்தான் மாமல்லபுரம். இவரையே திருமங்கை ஆழ்வார் கடல் மல்லைத் தலசயனர் என்று அழைக்கிறார்.

ஞானத்தின் உருவாகி
நிலமங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர்முறையால்
மகிழ்ந்து ஏத்தி வலங்கொள்ளக்
கானத்தின் கடல்மல்லைத்
தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை
நினைவார் என்நாயகரே

என்று பாடியும் மகிழ்கின்றார்.

இங்கு எப்படி இவர் தரையிலேயே படுக்கும்படி நேர்ந்தது என்று தெரிய வேண்டாமா? அதற்குப் பிரும்மாண்ட புராணத்தையே ஒரு திருப்புத் திருப்ப வேணும்.

புண்டரீகர் என்று ஒரு மகரிஷி. அவர் மகா விஷ்ணுவிடம் அத்தியந்த பக்தி உடையவர். தினம் தாமரை மலர் கொண்டே அர்ச்சித்து வழிபடுபவர்.

அவர் தலம் தலமாகச் செல்லும் போது திருவிட வெந்தை வந்து, அங்குள்ள வராகப் பெருமாளை வணங்குகிறார். அங்குள்ள தடாகத்தில் ஆயிரம் இதழ்கள் உள்ள ஓர் அரிய தாமரை மலர் கிடைக்கிறது, அவருக்கு. அதனைப் பரந்த