பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

வேங்கடம் முதல் குமரி வரை

உண்மைதான். தலசயனர் கோயில் உள்ளே தலசயனரைத் தவிரப் பார்க்க வேண்டிய சிற்ப வடிவங்கள் அதிகம் இல்லை. இருக்கின்ற ஒரு சில ஆழ்வார்களின் வடிவங்கள் பேரில் இருக்கும் எண்ணெய்க் கசடு எல்லாம் எத்தனையோ வருஷ காலத்தவை. ஆதலால் எல்லாம் மொழு மொழு வென்றே இருக்கும். அதனால் விரைவாகவே கோயிலுக்கு வெளியே உள்ள கலைச் செல்வங்களைக் காண்பதிலேயே அக்கறை காட்டலாம்.

இப்படி நமது பிரயாணத்தைத் துவங்கும்போது, நாம் முதலில் காண்பது கிருஷ்ண மண்டபத்தையே. அங்குதான் கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்துக் கோக்களையும் கோவலர்களையும் காத்துக் கொண்டு நிற்கிறான். அங்குள்ள கண்ணன் அப்படி ஒன்றும் சின்னப் பையன் இல்லை. எட்டடிக்கு மேலே வளர்ந்த ஆஜானுபாகு.

அவனையும் மற்றவர்களையும் பார்க்கிறபோதே, அங்கு பால் கறக்கும் கோபாலனையும் பார்க்கிறோம். அந்தக் கோபாலன் இன்றையக் காலத்தியவன். நாம் படம் பிடிக்கிறோம் என்று தெரிந்து நம்மைத் திரும்பிப் பார்த்து ஒரு நல்ல 'போஸ்' வேறே கொடுக்கிறான். பெரியதொரு பாறையிலே வெட்டிச் செதுக்கிய அற்புதச் சிற்பம். பின்னால் யாரோ மண்டபம் எல்லாம் கட்டி நாமெல்லாம் நின்று பார்க்க நல்ல வசதி பண்ணியிருக்கிறார்கள்.

இதற்குக் கொஞ்சம் மேற்கே நகர்ந்தால், பிரபலமான அர்ச்சுனன் தவம் என்னும் அர்த்த சித்திரப் பாறை முன் வந்து நிற்போம். நாம் நிற்கும் இடத்திலிருந்து பதினைந்து அடி தாழ்ந்தும், மேலே இருபதடி உயர்ந்தும், நீண்ட பெரிய இரண்டு பாறைகள் முழுவதையுமே அடைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிற்பங்கள் {இது அர்ச்சுனன் தவமா? இல்லை, பகீரதன் தவமா? என்பது இன்னும் விவாதத்துக்குரிய விஷயமாகவே இருக்கிறது. ஆனால் புதை பொருள் இலாகா