பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

வேங்கடம் முதல் குமரி வரை

நேரத்துக்கு வந்து செல்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாததாக இருக்கிறது. வேதகிரி ஈசுவரரைத் தேடி இக்கழுகுகள் வந்தாலும், அந்த வேதகிரி ஈசுவரரே இந்தக் கழுகுகளால்தானே பிரசித்தி பெற்றிருக்கிறார், ஏன், கோயிலும் மலையும் ஊரும் குளமும் கழுகுக் குன்றம் என்ற பெயரில்தானே நிலைத்திருக்கின்றன.

இந்தக் கழுக்குன்றம் சென்னையிலிருந்து நாற்பத்தைந்து மைல் தொலைவிலே இருக்கிறது. சென்னையிலிருந்தும் செல்லலாம். இல்லை, செங்கல்பட்டு வந்து, அங்கிருந்து தென் கிழக்காக ஒன்பது மைல் போனாலும் சென்று சேரலாம். இந்த ஊரிலே பிரசித்தி பெற்றது கழுகுகள் வரும் சஞ்சீவி மலையும், அம் மலை மேல் கட்டியிருக்கும் வேதகிரி ஈசுவரர் கோயிலுந்தான்.

மலை ஏறுவதற்கு முன், மலையையே வலம் வரலாம். இரண்டரை மைல் நடக்க முடியுமானால் நடக்கலாம். இல்லாவிட்டால் காரிலேயே கிரிப் பிரதக்ஷினத்தை முடித்துக் கொள்ளலாம். மலை மேல் ஏறிக் கழுகு வந்து போவதையெல்லாம் பார்த்த பின், அங்குள்ள கோயிலுக்குள்ளே நுழையலாம்.

இந்தக் கோயிலின் கர்ப்ப கிருஹம் பல்லவ மன்னவன் மகேந்திர வர்மனால் குடைந்து ஆக்கப்பட்டிருத்தல் வேண்டும். அங்குள்ள உட்புறத்துச் சுவர்களில் சோமாஸ்கந்தர், பிரும்மா, யோக தக்ஷிணாமூர்த்தி முதலியவர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சிற்ப வடிவங்களையெல்லாம் அங்குள்ள இருட்டில் காண்பது கொஞ்சம் கஷ்டமான காரியமே.

இங்குக் கோயில் கொண்டிருப்பவர் வாழைக் குருத்துப் போன்ற வடிவம் உடையவர். சுயம்பு மூர்த்தி என்பார்கள், ஆனால் நாம் காண்பது கவசமிடப்பட்ட சிவலிங்க