பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

223

விடுகிறார். அவரைத் திருப்பள்ளி படுத்தி வைத்திருக்கிறார்கள் (திருநாட்டுக்கு எழுந்தருள்வது என்றால், வைஷ்ணவ பரிபாஷையில் - இறந்து விட்டார் என்றும் திருப்பள்ளி படுத்துதல் என்றால், கிடத்தி வைத்திருத்தல் என்றுமே பொருள்).

அப்படி அவரது பூத உடல் இருக்கும்போது, அவரது வலது கையில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியே இருக்கின்றன. ஆளவந்தார் மனத்தில் இருந்த மூன்று அபிலாஷைகளையும் தட்டின்றி நிறைவேற்றுவேன் என்று இளையாழ்வார் வாக்குக் கொடுத்த பின்பே, மடங்கிய விரல்கள் நிமிர்கின்றன. இதன் பின் வைஷ்ணவ மதப்பிரசாரகராக இளையாழ்வார் முனைந்து வேலை செய்கிறார். வீட்டைத் துறக்கிறார். மனைவியைத் துறக்கிறார். சந்நியாசியாகிறார்.

ஸ்ரீராமானுஜர் என்ற திருநாமத்தோடு, ஸ்ரீரங்கம் மேல்கோட்டை திருநாராயணபுரம் முதலிய இடங்களில் தங்கியிருந்து, வைஷ்ணவ மத ஸ்தாபகராகத் தம் புகழ் நிறுவுகிறார். கிட்டத்தட்ட நூற்று இருபது வயதுவரை வாழ்ந்த இந்த ஆச்சாரியாரையே இளையாழ்வார், இராமானுஜர், எம்பெருமானார், எதிராஜர், ஸ்ரீ பாஷ்யக்காரர், உடையவர் என்றெல்லாம் வைஷ்ணவ உலகம் இன்றும் போற்றுகிறது. இவரது புகழையே திருவரங்கத்து அமுதனார் இராமானுஜர் நூற்றந்தாதி என்று நூற்று எட்டுப் பாடல்களில் பாடி மகிழ்கிறார்.

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன், நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென்குருகை வள்ளல்
வாட்டமிலா வண்தமிழ்மறை வாழ்ந்தது, மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுஜன் தன் இயல்பு கண்டே!