பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

வேங்கடம் முதல் குமரி வரை

என்ற பாட்டு நூற்று எட்டுப் பாடல்களில் ஒரு பாட்டு. நல்லார் பரவும் இந்த இராமானுஜரது தெளிவுற்ற கீர்த்தியையே மேலும் மேலும் விவரிக்கிறார், திருவரங்கத்து அமுதனார். இராமானுஜருக்கு ராமாவதாரத்திலே அளவு கடந்த ஈடுபாடு. படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் கோயிலாகவே இராமானுஜரைப் பார்க்கிறோம், அவரது வாழ்க்கை முழுதும். இந்த இராமானுஜரது அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதூருக்கே செல்கிறோம் இன்று நாம். - ஸ்ரீபெரும்பூதூர் சென்னைக்குத் தென்மேற்கே பங்களூர் செல்லும் வழியில் இருபத்து ஐந்து மைல் தொலைவில் உள்ள பெரிய ஊர். செங்கல்பட்டிலிருந்து சிங்கப்பெருமாள் கோயில் வந்து, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்பினாலும், இவ்வூர் வந்து சேரலாம்.

இந்த ஊருக்கு ஆதிப் பெயர் பூதபுரி என்று இருந்திருக்கிறது. மயான உருத்திரன் சடை விரித்து ஆடிய ஆட்டம் கண்டு, பூதகணங்கள் சிரித்திருக்கின்றன. அதனால் கோபமுற்ற உருத்திரன் பூதகணங்களைத் தன் சந்நிதியிலிருந்து விலக்கியிருக்கிறான். கவலையுற்ற பூத கணங்கள் ஸ்ரீமந்நாராயணனைப் பிரார்த்தித்திருக்கிறார்கள்.

நாராயணனோ அனந்தனை அழைத்து ஒரு சரஸை அமைக்கச் சொல்லிப் பூதகணங்களை அந்த அனந்த சரஸில் முழுகி எழச் சொல்லிப் பூத கணங்களைத் திரும்பவும் உருத்திரனிடம் சேர்த்திருக்கிறார். இப்படிச் சமாதானம் பண்ணி வைத்த நாராயணன் பெற்ற 'நோபல் பரிசு' தான் இந்தக் கிராமம்.

பூதங்களே நிர்மாணித்ததனால் பூதபுரி என்று கிராமத்துக்கும் பெயர் நிலைத்திருக்கிறது. நாராயணனும் ஆதிகேசவப் பெருமாள் என்ற திருநாமத்தோடு அங்கேயே கோயில் கொண்டு விடுகிறான். பூதபுரி தாளடைவில் பூதூர் என்றும்,