பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்தம்பங்களுக்கு மேற்பட்ட ஸ்தம்பங்கள் இருந்தாலும், அவைகளில் நான்கையே பூதங்கள் ஸ்தாபித்துக் கோயிலைக் கட்டியிருக்கின்றன. இங்குதான் உற்சவ காலங்களில் திருமஞ்சனம் முதலிய ஆராதனங்கள் நடைபெறுகின்றன.

இனி மேற்கே திரும்பி ஆதிகேசவர் சந்நிதிக்கு வரலாம். வாயிலிலேயே ஜய விஜயர் என்னும் துவார பாலகர்கள் கம்பீரமாக எழுந்து நிற்பார்கள். அவர்களிடம் அனுமதி பெறாமலேயே உள்ளே நுழையலாம். ஆதிகேசவப் பெருமாள் கிழக்கு நோக்கியவராய் நின்ற திருக்கோலத்தில் நமக்குச் சேவை சாதிப்பார். தூக்கிய இரண்டு கைகளில் சங்கும் சக்கரமும். மற்றொரு வலது கை ஹஸ்தம் அபயப்பிரதானம் அளிக்கும். மற்றொரு இடக்கையோ நீண்டு தாழ்ந்து தொடையில் இருத்தப்பட்டிருக்கும்.

ஆதிகேசவனைச் சென்று கண்டு வணங்குபவர்களுக்குச் சம்சாரமாகிய கடலின் ஆழம் தொடையளவுதான் என்று காட்டுவதாக ஐதீகம். வலது மார்பில் ஸ்ரீவத்ஸம். இத்துடன் ஸ்ரீதேவி பூதேவியார் வேறே. இந்த ஆதிகேசவருக்கு முன்னாலே கேசவா நந்தன வர்த்தனன் என்னும் உத்சவர். இவரது திருஉரு மற்றப்படி ஆதிகேசவன் திருஉரு போலவே இருந்தாலும், தாழ்ந்த இடக்கை மட்டும் ஆகூயவரதமாக இருக்கிறது. ஆம், மக்கள் எல்லோரையும் வாருங்கள் என்று அழைத்து அருளுகின்ற நிலை. (இவருக்கு ஒரு பயம் போலும். பிரபலமான உடையவர் பக்கத்திலேயே இருப்பதால், அவரை வணங்கி, விண்ணப்பம் செய்ய வேண்டியவைகளைச் செய்து விட்டுத் தம்மைக் கவனிக்காமலே சேவார்த்திகள் போய் விடுவார்களோ என்று.) அப்படி அவசரமாக ஓடுபவர்களைக்கூடத் தன் பக்கம் அழைத்து அருள் செய்யும் அருளாளர் இவர்.

இந்தக் கோயிலின் பெரிய பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் தாயார் சந்நிதியிருக்கிறது. தாயாருடைய திருநாமம்