பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

வேங்கடம் முதல் குமரி வரை

எல்லாம் இடிந்து கிடப்பதால், ஊரில் உள்ள கழுதைகளும், மாடுகளும் இக்கோயில் பிராகாரத்திலேயே நிற்கும். இந்த அடையாளங்களை வைத்து எளிதாகக் கோயிலைக் கண்டு பிடித்து விடலாம்.

இந்தக் கோயிலில்தான் வைகுண்டப் பெருமாள் இருக்கிறார். அவருக்கு எண்னெய், தண்ணீர் கிடைப்பது மீக்க அரிது என்றாலும் இந்தக் கோயில் சுவர்களில்தான் ஒரு கல்வெட்டு, சோழ மன்னர்கள் காலத்து எலெக்ஷன் எப்படி நடந்தது என்று கூறுகிறது. இந்தக் கல்வெட்டின்படி, அந்தக் காலத்து மக்கள் வாக்குரிமைச் சீட்டுகளை ஓலையில் எழுதி, அதற்கென வைத்துள்ள ஒரு குடத்தில் போடுவார்கள். இப்படிப் போடும் முறையையே குடவோலை என்பார்கள்.

ஏரி வாரியம், தோட்ட வாரியத்துக்குப் பிரதிநிதிகளாக விரும்புபவர்கள் பெயர்களை ஓட்டர்கள் எழுதி, இக்குடத்தில் இடுவார்கள். பின்பு குடவோலையைப் பெரிய சபை கூட்டி வயது முதிர்ந்த நம்பியாரின் முன்னிலையில் ஒரு சிறுவனைக் கொண்டு, ஓலைகளை ஒவ்வொன்றாய் எடுத்து, ஒரு மத்தியஸ்தன் கையில் கொடுப்பார்கள். அவனும் உள்ளங்கையை அகல விரித்துக் காட்டி விட்டு ஓலையை வாங்கி வாசிப்பான். அவன் வாசித்த பிறகே, நம்பியாரும் சபையோரும் படிப்பார்கள்.

யாரூடைய பெயருக்கு அதிகச் சீட்டுகள் கிடைத்திருக் கின்றனவோ, அவர்களே தோட்டவாரியம் ஏரிவாரியம் முதலிய பொதுக் காரியங்களுக்கு நியமிக்கப் படுவார்கள். இதை யெல்லாம் விளக்கமாகவே கூறும் கல்வெட்டு.

இக் கல்வெட்டு பண்டித வத்ஸன், வீர நாராயணன், குஞ்சரமல்லன் என்ற விருதுப் பெயர்களைப் பெற்ற பராந்தகச் சோழன் காலத்தில் பொறிக்கப்பட்டது என்று அறிகிறோம். இவன் ஆட்சிக் காலம் கி.பி. 907 முதல் 950 வரை - நாற்பத்து மூன்று ஆண்டுகள்.