பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

235

முடியாது. கோயிலின் முன்பாகம் கடைகளால் மறைக்கப் பட்டிருக்கும். கல்வெட்டுகளைப் படிப்பது என்பது இயலாத காரியம். இடிந்து விழுந்த கற்களை - கல்வெட்டு இருந்த கற்களைத்தான் - மக்கள் தங்கள் தங்கள் வீட்டுக் கட்டடம் கட்ட எடுத்துப் போகிறார்கள் என்றும் கேள்வி. புதை பொருள் இலாகாக்காரர்கள் கொஞ்சம் விழிப்போடிருந்து இதையெல்லாம் தடுக்க வேணும்.

வந்ததோ வந்தோம், ஆதலால் படி ஏறி, மூடிய கதவிடுக்கு வழியாக வைகுண்டப் பெருமாளை வணங்கி விட்டு மேலே நடக்கலாம்.

இந்த உத்தரமேரூரில் பார்க்க வேண்டிய கோயில்கள் இன்னும் இரண்டு உண்டு. இங்கு அந்தக் காலத்தில் ஏழு கோயில்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள். இக் கோயில்களில் எல்லாம் பெரியதும் சிறப்புடையதும் சுந்தர வரதராஜ சுவாமி கோயில்தான். இது அந்த ஊரில் உள்ள பெரிய தெருவின் மேலக் கோடியில் விமானங்கள் கோபரங்கள் எல்லாம் உடையதாயிருக்கிறது.

இக் கோயில் மூன்று தளங்களோடு கூடிய கோயில், அடித்தளத்தில் இருப்பவர் சுந்தர வரதராஜர். இவர் நின்ற கோலத்தில் சேவை சாதிப்பார். இவரைத் தவிர, இந்த அடித்தளத்திலேயே அச்சுத வரதன், அநிருத்தவரதன், கல்யாணவரதன், ஆனந்தவல்லித்தாயார், ஆண்டாள் முதலிய எல்லோரையும் தரிசிக்கலாம்.

அடுத்த தளத்தில் இருப்பவர் வைகுண்ட வரதர். அவருடன் கிருஷ்ணார்ச்சுனர், யோக நரசிம்மர், லக்ஷ்மி வராகன் எல்லோருமே இருக்கிறார்கள், இவர்களையும் தரிசித்த பின், மூன்றாவது தளத்தில் ஏறலாம். அங்கு நல்ல வசதியாகக் காலை நீட்டிக் கொண்டிருப்பவர் ரங்கநாதவரதர். இக்கோயில் இப்படி மூன்று தளங்களாகக் கட்டப் பட்டிருந்தாலும், அவைகளில்