பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

239

அவசரமாக ஊர் திரும்புகின்ற பயணம். ஆதலால் கடைகளில் நுழைந்து ஆராதனைக்குரிய பொருள்களை வாங்கிக் கொள்ளவோ நேரமில்லை. ஆதலால் கையை வீசியே நடக்கிறான். கோயிலுள் நுழைகிறான். நேரே கர்ப்ப கிருகத்துக்கே வந்து விடுகிறான். அங்கு லகஷ்மணசமேதனாக நிற்கும் கோதண்டராமனை, அவன் ஆராதித்த கருணாகரனை எல்லாம் கண் குளிரக் காணுகின்றான். அந்த அல்லையாண்டு அமைந்த மேனி அழகனை, அந்த அழகனது அழகை எல்லாம் எத்தனையோ பாடல்களில் ராம கதை முழுவதும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவன் ஆயிற்றே.

என்றாலும் செந்தாமரைக் கண்ணொடும் செங்கனி வாயினொடும் சந்தார் தடந்தோளோடும் தாழ்தடக்கைகளோடும் வில்லேந்தி நிற்கும் அந்த ராமனைக் கண்ட பொழுது, தான் சொல்ல வேண்டுவது இன்னும் எவ்வளவோ இருக்கின்றன போல் தெரிகிறதே என்ற எண்ணம். இப்படித் தன் எண்ணங்களை அலை பாயவிட்டு அப்படியே மெய் மறந்து நின்றிருக்கிறான். மேலே கிடந்த உத்தரீயத்தை எடுத்துப் பவ்யமாக அரையில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. மூர்த்தியைக் கை கூப்பி வணங்க வேண்டுமென்றும் தோன்றவில்லை.

இந்த நிலையில் நிற்கும் கம்பனைப் பக்கத்திலே நின்று கொண்டிருந்த பரம பாகவதர் ஒருவர் பார்க்கிறார். அவருக்கோ இவன் பேரில் ஒரே கோபம். 'இப்படியும் இருக்குமா ஒரு பிரகிருதி? சந்நிதி முன் வந்தும் வணங்காமல் நிற்கிறானே. அப்படி இவன் என்ன வணங்காமுடியனா?’ என்றெல்லாம் எண்ணுகிறார். அவருக்கு இருந்த ஆத்திரத்தில் கம்பன் விலாவிலேயே ஒரு குத்துக் குத்தி, என்ன, ஐயா! ஆராதனைக்கு உரிய பொருள்தான் ஒன்றும் கொண்டு வரவில்லை என்றால், சந்நிதியில் மூர்த்தியைக் கை கூப்பித் தொழவுமா தெரியாது?’ என்று கேட்கிறார்.