பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. காளத்தி அப்பர்

'இறைவனிடத்து இடையறா அன்பு செலுத்திய நாயன்மார்கள் அறுபத்து மூவரில் செயற்கரிய செயல் செய்தார் யார்?' என்பது ஒரு பட்டி மண்டபத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருள். அறுபத்து மூன்று அன்பர்களது செயலையும் அலசி ஆராய்வது சிரமம் என்று கருதிப் பட்டினத்தார். குறிப்பிடும் மூன்று. திருத்தொண்டர்களை மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொண்டனர்.

வாளால் மகவு அரிந்து ஊட்ட
வல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமைதுறக்க வல்லேன்
அல்லன்; தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடந்து அப்ப
வல்லேன் அல்லன்; நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்
காளத்தி அப்பருக்கே?

என்று சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் மூவரையும் போல, அரிய செயல் செய்து இறைவன் அருளைப் பெறத் தம்மால் இயல வில்லையே என்று ஏங்கி இருக்கிறார் பட்டினத்தார்.

இம்மூவர் செயலையுமே அன்று அறிஞர்கள் விவாதித்தார்கள். கடைசியில் தலைவரது தீர்ப்பு கண்ணப்பர் பக்கமே இருந்தது. திருநீலகண்டர் தம் உறுதியில் நிலைத்து நிற்பதற்கு அவர் மனைவி இறைவன் பேரிலேயே ஆணை இட வேண்டியிருந்தது. சிறுத்தொண்டர் பெற்ற மகனையே அரிந்து கறி சமைத்த செயலில் 'எதுவும் எனக்கு அரியது அன்று' என்று சொல்லும் ஆணவம் சிறிது கலந்து விடுகிறது.