பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

25

கண்ணப்பர் ஒருவர்தான் பிறருடைய தூண்டுதல் ஒன்றுமே இல்லாமல், 'அயல் அறியா அன்பை' இறைவனி டம் செலுத்துகிறார். ஆதலால் அவர் அன்பே சிறந்தது. அவர் செய்ததே அரிய செயல் என்று முடிவு கட்டினார் பட்டி மண்டபத் தலைவர்.

இப்படி அறுபத்து மூன்று அன்பர்களில் இறைவனிடம் அன்பு செலுத்தியவர்களில் தலை நிற்கிறார் கண்ணப்பர். அத்தகைய கண்ணப்பராலே பெருமை பெற்றவர்தான் காளத்தி அப்பர். கொலைத் தொழிலே புரியும் வேட்டுவக் குலத்திலே பிறந்த திண்ணனார், வேட்டையாடச் சென்ற இடத்திலே, அங்குள்ள குடுமித் தேவருக்கு ஆட்பட்டு, அவருக்கு இயல்பான முறையில் வழிபட்டு நின்றவர். இறைவனது வலக் கண்ணில் உதிரம் ஒழுகியபோது, தம் வலக் கண்ணையே தோண்டி எடுத்து அப்பி, வழியும் இரத்தத்தைத் துடைத்தவர்.

திரும்பவும் இறைவனது இடக் கண்ணிலும் இரத்தம் வடிந்தபோது, தக்க மருந்து தம்மிடம் உண்டு என்பதால், குதூகலித்துத் தம் இடக் கண்ணையும் தோண்டி எடுக்க முனைந்தவர். திண்ணனாரது திண்மையான அன்பைக் கண்ட இறைவனும், 'நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப!' என்று அவரது கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தும் பாக்கியம் பெற்றவர்.

இத்தகைய 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' தம்மிடம் இல்லையே என்றுதான் மாணிக்கவாசகரும். அகங்கரைந்து உருகுகிறார். “வாய் கலசமாக வழிபாடு செய்யும் வேடன், மலராகு நயனம் காய்கணையால் கிடந்து ஈசன் அடி கூடினான்“ என்று ஞானசம்பந்தர் வியந்து வியந்து பாடுகின்றார்.

ஒரே ஒரு ரகசியம். இன்று காளத்தியில் கோயில் கொண்டிருக்கும் காளத்தி அப்பருக்குச் சொந்தமாக ஒரு கண்