பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வேங்கடம் முதல் குமரி வரை

பரீக்ஷை, மேருமலையை ஆதிசேஷன் சுற்றி வளைத்துக் கட்டிப் பிடிக்க, வாயு தன் பலங்கொண்ட மட்டும் காற்றை எழுப்பி, மலையை அசைக்கக், கடைசியில் அம்மலையின் பிஞ்சுகள் மூன்று பறித்து எறியப்பட, அப்படி எறியப்பட்ட மலைப் பிஞ்சு ஒன்றே இங்கு விழுந்து, காளத்தி மலையாக உருவாகி இருக்கிறது என்பது கர்ண பரம்பரை.

இக் காளத்தி அப்பர் கோயிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் ரயிலிலே செல்வதானால், சென்னையிலிருந்து ரேணிகுண்டா சென்று, கூடூர் செல்லும் ரயிலில் மாறி, ரேணிகுண்டாவிலிருந்து பன்னிரண்டு மைல் செல்ல வேணும். இல்லை, காரிலோ பஸ்ஸிலோ சென்னையிலிருந்து நேரடியாக எண்பது மைல் சென்று, இத்தலத்தை அடையலாம். மேற்கே இருந்து வருகிறவர்கள் திருப்பதி சென்று, திருமலை ஏறி வேங்கடவனைத் தரிசித்து விட்டுப் பின்னர் காளத்தி வந்து சேரலாம்.

ஸ்வர்ணமுகி என்னும் பொன்முகலி ஆற்றங் கரையிலே அமைந்திருக்கும் கோயிலுக்கும் சென்று தொழலாம். கோயில் வாசலிலே ஒரு பெரிய கோபுரம்; காளிகோபுரம் என்று பெயர். ஆனால், இந்தக் கோபுரத்துக்கும் கோயிலுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. தனித்து நிற்கிறது.

பக்கத்தில் உள்ள சிறிய கோபுர வாயிலில் நுழைந்து வளைந்து வளைந்து சென்றால் தென்பக்கம் உள்ள கோயிலின் பிரதான வாயிலுக்கு வந்து சேருவோம். அதன்பின் கோயிலில் நுழைந்து, வலமாக வந்தால், மேற்கு நோக்கியவராய் இருக்கும் காளத்தியப்பரைத் தரிசிக்கலாம்.

இவர் சிவலிங்கத்தில் ஒரு புதிய உருவை ஏற்றிருக்கிறார். மூன்று நான்கடி உயரம். அடியில் பெருத்து முடியில் கூர்மையாக ஒடுங்கிய மூர்த்தி. மாலை போட்டு அலங்கரிப்பதற்கு என்று ஒரு தனிச் சட்டம். அதை