பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

வேங்கடம் முதல் குமரி வரை

இசைதிறந்து அமர்ந்த கையால்
எற்றினன் எற்ற லோடும்
திசைதிறந்து அண்டம் கீறிச்
சிரித்தது செங்கட் சீயம்!

செங்கட் சீயம் சிரித்த காட்சியே இத்தனை பயங்கரம் என்றால், சீறி எழுகின்ற சிங்கப்பிரானது திருவுருவம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

இறைவனுடைய சக்திபூமியோடு மட்டும் நிற்பதல்ல, வான் முகடு முழுவதும், எட்டுத் திசைகளையும் தொட்டு நிற்கும் என்ற உண்மையைத்தானே இந்த மூர்த்தம் விளக்குகிறது. 'இந்த மூர்த்தி பயங்கர உருவத்தில்தான் இருக்க வேண்டுமா? சாந்த மூர்த்தியாக இருத்தல் கூடாதா?' என்று எண்ணியிருக்கிறார்கள் கலைஞர்கள்.

ஆதலால் நரசிம்மனது மடியிலே லக்ஷ்மியை இருத்தி, லக்ஷ்மி நரசிம்மனாகக் கண்டிருக்கிறார்கள். யோக நிலையில் இருந்து மக்களுக்கு எப்போதும் அருள் புரிபவனாகக் கற்பனை பண்ணி, யோக நரசிம்மனாக சிருஷ்டி பண்ணியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சாந்த நிலையிலே யோக நரசிம்மனாகக் கோயில் கொண்டிருக்கும் இடந்தான் சோழசிங்கபுரம் என்னும் சோழங்கிபுரம். ஆங்கிலத்தில் சோளிங்கர் என்ற பெயரோடு, வட ஆர்க்காடு மாவட்டத்திலே திருத்தணிகைக்கு மேற்கே இருபது மைல் தூரத்திலே இருக்கும் ஒரு பெரிய ஊர் அது.

இச் சோழங்கிபுரம் அன்று கடிகாசலம் என்ற பெயரோடு விளங்கியிருக்கிறது, கடிகை என்றால் வடமொழியில் ஒரு நாழிகை என்று பொருள். இந்த ஸ்தலத்தில் ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து, அங்குள்ள யோக நரசிம்மனைக் கண்டு