பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

43

வனங்கினால், முக்தி பெறலாம் என்பதன் காரணமாகவே, இத் திருப்பதி கடிகை என்று பெயர் பெற்றிருக்கிறது.

தொண்டை நாட்டிடையே, சோழ நாடு போல வளம் மிகுந்து, நரசிங்க மூர்த்தி தங்குவதற்கு வசதியான இடமாக இருப்பதனால், சோழ சிங்கபுரம் எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.

அது எல்லாம் இல்லை. இந்த ஊரில் சோழ மன்னன் ஒருவன் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். அதனாலேயே சோழலிங்கபுரம் என்று பெயர் பெற்றது. சோழலிங்கபுரமே நாளடைவில் சோழசிங்கபுரம் என்று மாறிற்று எனக் கூறுவாரும் உளர். இதை வலியுறுத்தச் சோழிசுவரர் கோயில் என்று ஊரின் நடுவில் இருக்கும் கோயில் ஒன்றையும் காட்டுவர்.

இதன் உண்மை எப்படி இருந்தாலும், சோழலிங்கேசுவரர் இன்று சோழ நரசிம்மனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் ஒதுங்கியே வாழ்கிறார். ஆதலால் நாமும் சோழ நரசிம்மருக்கே பிரதானம் கொடுத்து, சோழசிங்கபுரம் என்ற பெயராலேயே இந்த ஊரை அழைக்கலாம்.

இந்த யோக நரசிம்மனது கோயில் கிட்டத்தட்ட நானூறு அடி உயரமுள்ள ஒரு மலையின் மேல் இருக்கிறது. எந்தத் திக்கிலிருந்து கோயிலை நெருங்கினாலும்,