பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வேங்கடம் முதல் குமரி வரை

கோயிலும் மலையும் பத்து மைல் தூரம் வரை தெரியும். எங்கு சுற்றினாலும் திருத்தணி - சித்தூர் ரோடுக்கு வந்து, அதிலிருந்து பிரியும் பாதை வழியாக மலையடிவாரத்துக்கு வந்து சேரலாம்.

அடிவாரத்திலிருந்து மலையைப் பார்த்தால், அங்குள்ள கோயிலுக்கு ஏறமுடியுமா என்று பிரமித்து நிற்போம். காரணம் கோயில் இருக்கும் மலை உயரமானதென்று அல்ல. அந்த மலை மேல் நிற்கும் கோயிலோடு போட்டி போட்டுக் கொண்டு, கோயிலுக்கு முன்னாலே நீண்டு வளர்ந்து நிமிர்ந்திருக்கும் இன்னொரு குன்றுதான் அம் மலைப்பை ஏற்படுத்தும்.

இதைப் பற்றிக் கூட ஒரு கதை. பைரவேசுவரரது ஆணையின்படி, இந்தக் குன்று வளர்ந்து கொண்டே போயிற்றாம். அதன் வளர்ச்சி தேவலோகத்தை முட்டிவிடும் போல் இருக்கிறதே என்று எண்ணிய இந்திரன், பலராமனைக் கொண்டு, தடுத்து நிறுத்தினான். அதனால்தான் இம்மட்டமோடு நிற்கிறது என்பார்கள் அங்குள்ள மக்கள்.

ராயோஜி என்பவரால் மலை மேல் உள்ள கோயிலுக்கு ஏறப் படிக்கட்டுகள் கட்டப்பட்டன என்று தெரிகிறது. இந்தப் படிக்கட்டுகள் மிகவும் கரடுமுரடாகயிருந்ததைப் புதுப்பித்து அகலமான படிகள் அமைத்துள்ளனர்.

இந்த மலை மீதுள்ள யோக நரசிம்மனை அன்று திருமங்கை ஆழ்வார் கண்டு வணங்கியிருக்கிறார். இவர் தக்க பெருமை உடைய தயாளு என்று உணர்ந்திருக்கிறார். மேலும் வெல்லம் போல் இனிப்புள்ளகனியாக விளங்குகிறான், அனுபவிப்பவர்களுக்கு. ஆதலால் மிக்கான் என்றே இந்த மூர்த்தியை அவர் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மிக்காளை, மறையாய் விரிந்த
விளக்கை, என்னுள்
புக்கானைப் புகழ் சேர்
பொலிகின்ற பொன்மலையை,