பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. வள்ளிமலை வள்ளி

சென்ற சில வருஷங்களுக்கு முன் நான் பூனா நகரத்துக்குப் போயிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் தங்கினேன். ஒரு நாள் காலை, அங்குள்ள தமிழ் அன்பர்கள் சிலரோடு நகரத்துக்குப் பக்கத்திலே உள்ள பார்வதி மலையில் உள்ள கோயில்களைப் பார்க்கச் சென்றேன். என் மனைவியும் உடன் வந்திருந்தாள்.

மலை பெரிய மலை இல்லை. திருத்தணி மலை உயரமே இருக்கும். ஆனால் அங்கு கட்டியிருப்பது போல் அழகான படிக்கட்டுகள் இல்லை, மண்டபங்களும் இல்லை. படிக்கட்டு விசாலமாக இருந்தது. படிக்கட்டு கட்டிய மராத்திய மன்னர்கள் குதிரை மேல் ஏறிக் கொண்டே மலை மேல் உள்ள கோவிலுக்குச் செல்வார்களாம்.

மலைச் சிகரத்தை அடைந்தவுடன் நாங்கள் கண்டது தேவ தேவன் கோயில். தேவர்கோ அறியாத, தேவ தேவனை வணங்கிவிட்டு, பக்கத்திலே இருக்கும் பண்டரிபுரம் விட்டல், பவானி அன்னை, மகாவிஷ்ணு முதலியவர்களது கோயில்களுக்குச் சென்றோம். கடைசியாகத் தேவ தேவன் கோயிலுக்கு வலப்புறமாக உள்ள ஒரு சிறு கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.

கோயில் வாசலில் ஒரு பலகை. அதில் 'இந்தக் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்!' என்று ஆங்கிலத்திலும் மராத்தியிலும் எழுதியிருந்தது. இதற்குக் காரணம் என்ன என்று என் உடன் வந்த நண்பர்களை விசாரித்தேன்.

'இங்கு கோயில் கொண்டிருப்பவன் கார்த்திகேயன். அவன் பிரம்மசாரிய விரதம் அனுஷ்டிக்கிறவன். ஆதலால் அவன் பெண்களையே பார்க்கிறதில்லை என்ற வைராக்கிய

வே-கு : 4