பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வேங்கடம் முதல் குமரி வரை

பாலங்களைப் போல், செங்கல்லும் சுண்ணாம்பும் வைத்துக் கட்டப்பட்டது அல்ல. எல்லாம் உருக்கிரும்பு மயம். பாலத்தின் மேலே குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் இரும்புக் கிராதிகள், உருக்கிய வெள்ளியால் ஆக்கப்பட்டவையோ என்றும் தோன்றும். இன்று சினிமாப் படம் பிடிப்பவர்கள் இப்பாலத்தை, இப்பாலத்தில் கார் ஓட்டிச் செல்லும் கதாநாயக நாயகிகளை யெல்லாம் பலமுறை படம் பிடித்து மக்களுக்குக் காட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

இந்தப் பாலத்தைக் கடந்ததும் இடப்பக்கம் திரும்பி, பின்பு கிழக்கு நோக்கி வந்தால் கோயிலின் பிரதான வாயிலுக்கு வந்து சேருவோம். கோயிலின் வாயில் தெற்கு நோக்கி இருக்கிறது.. இருந்தாலும் இங்குக் கோயில் கொண்டிருக்கும் வல்லநாதரும் வல்லாம்பிகையும் கிழக்கு நோக்கிய வண்ணமே இருக்கிறார்கள். இந்தக் கோயிலை, இந்த ஊரையெல்லாம் மக்கள் திருவலம் என்று அழைத்தாலும், அந்தப் பழைய தேவார காலத்திலே, இதனைத் திருவல்லம் என்றே அழைத்திருக்கிறார்கள்.

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர், கற்றவர் கண்டு மகிழும் இத்திருவல்லம் என்னும் தலத்துக்கும் வந்திருக்கிறார்.

தாயவன், உலகுக்குத் தன் ஒப்பு இல்லாத்
தூயவன், தூமதி சூடி, எல்லாம்
ஆயவன், அமரர்க்கும் முனிவர் கட்கும்
சேயவள் உறைவிடம் திருவல்லமே

என்று வல்லநாதரைப் பாடியிருக்கிறார்.

கோயிலின் குடைவரைவாயிலைக் கடந்து உள்ளே வந்தால் ஓர் அழகிய சிறிய கோபுர வாயிலுக்கு வந்து சேருவோம். இக் கோபுர வாயிலையும் கடந்து உள்ளே வந்தால், அங்குக் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாரைக் கண்டு வணங்கலாம். பிள்ளையாருக்கு வலம் வந்த விநாயகர் என்ற