பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வேங்கடம் முதல் குமரி வரை

இந்த ஊர் சென்று இந்தப் பெருமாளைத் தரிசிக்கச் சென்னையிலிருந்து பங்களுர் அல்லது கோவை செல்லும் ரயிலில் ஏறலாம். குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித் தெற்கு நோக்கி இரண்டு மூன்று மைல் வந்து, பாலாற்றையும் கடந்தால், இந்த ஆற்றின் தென் கரையிலுள்ள கோயிலுக்கு வந்து சேரலாம்.

காரிலேயே செல்லக் கூடியவர்கள் வேலூருக்கு மேற்கே பதினான்காவது மைலில் ஊருக்குள் திரும்பி, வடக்கே பார்த்துச் சென்றாலும் கோயிலுக்குப் போய்ச் சேரலாம். சந்நிதித் தெருவில் உள்ள தேரடியில் இருக்கும் சிறிய திருவடி கோயிலில் அஞ்சலி ஹஸ்தராக இருக்கும் ஆஞ்சநேயரை வணங்கி விட்டு, மேலும் மேற்கே நடந்து திருவந்திக் காப்பு மண்டபம் கோபுர வாசல் எல்லாம் கடந்தால், கோயிலை அடையலாம்.

கோபுரம், கோயில், மண்டபம். சந்நிதி எல்லாவற்றையும் பார்த்தால், இந்த வடவரங்கர், தென்னரங்கரைப் போல், அவ்வளவு செல்வந்தர் இல்லை என்று தெரியும். இவருடைய வருஷ வருமானம் சர்க்கார் கொடுக்கும் தஸ்திக் பணம் ரூ.1103-15 பைதான். ஏதோ கொஞ்சம் தோப்பும் பன்னிரண்டு செண்டு நன்செய் நிலமுமே இவருடைய ஸ்தாவர சொத்து.

ஆதலால் இங்கு அர்ச்சகர்கள் கெடுபிடியெல்லாம் இருக்காது. அர்ச்சகர்களை ஆள் அனுப்பித்தான் தேடிப் பிடிக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர் வந்தபின், பள்ளிகொண்டான் சந்நிதிக்குப் போகுமுன், ஒரு சிறு மாடத்தில் மேற்கே தலையும், கிழக்கே காலும் நீட்டிக் கொண்டு, ஒரு சிறு ரங்கநாதர் இருப்பார். கஸ்தூரி ரங்கர் என்ற இவரை அங்குள்ளவர்கள் சோட்டா ரங்கநாதர் என்று நமக்கு அறிமுகம் செய்து வைப்பார்கள்.