பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

69

விஷயம் என்ன என்று விசாரித்தால், முகம்மதியர்கள் படையெடுத்துக் கோயில்களை இடித்துக் கொண்டு வந்த போது, இந்தத் தலத்தில் உள்ளவர்கள் பள்ளி கொண்டானைக் காப்பாற்றக் கர்ப்பகிருஹத்துக்கு முன் ஒரு பெரிய சுவர் எழுப்பி, அவருக்குப் பதிலாக இந்தச் சிறிய ரங்கநாதரை உருவாக்கி, வெளியே கிடத்தியிருக்கிறார்கள்.

கோயிலுக்குள் நுழைந்த முகமதியர், இவர்தானா உங்கள் சாமி? இது என்ன சோட்டா சாமி?’ என்று சொல்லிவிட்டுத் திரும்பி விட்டார்களாம். ஆம், மோட்டா ரங்கநாதரைக் காப்பாற்றிய சோட்டா ரங்கநாதர் தம்மையுமே காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். ஆதலால் இன்றும் இங்கு இவருக்கே அக்ர ஸ்தானம.

கர்ப்பகிருஹத்தில் இருக்கும் பள்ளி கொண்டான் (மோட்டா ரங்கநாதன் தான்) நல்ல ஆஜானுபாகு. கிரீடம், குண்டலம், திருமண்காப்பு, வேட்டி, உத்தரீயம் எல்லாம் சாத்திக் கொண்டு, திருவனந்தாழ்வான் என்னும் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவி அவரது கையைத் தாங்கப், பூதேவி திருவடிகளை வருடிக் கொண்டிருக்கிறாள். நாபிக் கமலத்தில் நான்முகன். எல்லாம் நல்ல சிலை உருவில்.

அரவணையில் அறிதுயில் கொள்ளும் இந்த அரங்கனைத் தொழுதுவிட்டு, வெளியே வந்து கோயிலை ஒரு சுற்றுச் சுற்றலாம். தாயார் சந்நிதியில் விசேஷம் ஒன்றும் இல்லை. ரங்கநாதனுக்கு ஏற்ற ரங்கநாயகி அங்கிருந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறாள்.

இந்தக் கோயிலுக்கு வரும் கலை அன்பர்கள் எல்லாம் கண்டு தொழ வேண்டிய சந்நிதி மூன்றும் கோயிலின் மேலப்பிராகாரத்திலே தான் இருக்கிறது. அவைதாம் ராமன், கண்ணன், ஆண்டாள் முதலிய மூவருக்கும் ஏற்பட்ட தனித்தனிக் கோயில்களாகும்.