பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வேங்கடம் முதல் குமரி வரை

கோயில் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் முன் மண்டபத்தோடு கூடிய ஒரு சிறிய கோயிலில் சீதாலக்ஷ்மண சமேதனாக ராமன் நல்ல சிலை வடிவில் நின்று கொண்டிருக்கிறான். சுமார் நான்கடி உயரமுள்ள அச் சிலாவடிவங்கள் மிகவும் அழகு வாய்ந் தவை. 'அல்லையாண்டு அமைந்த மேனி அழகனாய்' அமைந்த ராமன், லகஷ்மணன், சீதை மூவரையுமே சேர்த்துப் பார்க்கலாம்.

இங்கே ராமாயணப் பாராயணம் செய்து, கௌசலையாய் ராமனைத் தாலாட்டி, தசரதனாய் ராமன் வனம் புகப் புலம்பி, கரதூஷண யுத்தத்தில் ராமனுக்கு உதவி புரியத் தண்டெடுத்து அனவரதமும் ராம கதை யருளும் குலசேகர ஆழ்வாரையும் இந்தச் சந்நிதியிலேயே காணலாம் - செப்புச் சிலை உருவில்.

ராமர் சந்நிதியை விட்டுக் கொஞ்சம் வடக்கே நகர்ந்தால், அங்கொரு சிறு கோயில். அங்கே வெண்ணெய் உண்ணும் கண்ணன். 'கண்ணன் என்னும் கருந் தெய்வ'க் காட்சிக்கு ஏங்கி நிற்பவர்கள் எல்லாம் இங்கு கல்லிலும் செம்பிலும் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும் கண்ணனைக் கண்டு வணங்கலாம். கண்ணன் உதடுகளிலே தவழும் குறுநகை நம்மைப் பரவசப்படுத்தும்.

வெண்நெய் உண்ட வாயனாக ரங்கநாதனைக் கண்டு வேறொன்றையும் காணாதவர்அல்லவா திருப்பாணாழ்வார்? அவரையுமே பார்க்கலாம், இந்தச் சந்நிதியிலே.

குழந்தை கண்ணனைப் பிரிந்து இன்னும் கொஞ்சம் வடக்கே நகர்ந்தால், ஆண்டாள் சந்நிதி. கல்லுருவிலும், செப்புப் படிமத்திலும் உருவாகியிருக்கும் ஆண்டாள் வடிவத்தில், அவள் வடிவழகு அத்தனையையும் கண்டுவிட முடியாது. அதற்கு இன்னும் கொஞ்சதுரம் நடக்க வேண்டும். திரும்பவும் பள்ளி கொண்டான் சந்நிதியில் நுழைந்து,