பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

77

அபிஷேகம் ஏற்ற பின்னும் தலையை நிமிர்த்தாமலேயே நின்று விடுகிறான். ஏன், இன்றுமே அப்படித்தான் நின்று கொண்டிருக்கிறான்.

இந்த அற்புத நிகழ்ச்சியை நினைத்துத்தான் இன்றும் கார்த்திகைக் கடைசி ஞாயிறு உற்சவம் இக்கோயிலில் சிறப்பாக நடக்கிறது. பல அற்புதங்களும் நிகழ்கின்றன. இந்த வட்டாரத்தில் உள்ளவர்கள், முக்கியமாகப் பிள்ளைப்பேறு கிட்டாதவர்களும், பில்லி, சூன்யம், தீக்காற்று முதலியவைகளால் துயர் உறுகிறவர்களும் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். அப்படிப் பிரார்த்தித்துக் கொள்கிற பெண்கள் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் கடைசிச் சனிக்கிழமை இரவு இக்கோயிலுக்கு வந்து, சிம்மக் குளத்தில் முழுகி எழுந்து, நனைந்த உடையோடேயே அங்குள்ள மண்டபங்களில் குப்புறப் படுத்துக் கொள்கிறார்கள். தூங்கியும் போய் விடுகிறார்கள்.

அப்போது விருத்த வேதியராக ஒருவர் வந்து, புஷ்பம், பழம், பாலாடை எல்லாம் கொடுப்பதாகக் கனவு கண்டால், அடுத்த ஆண்டுக்குள்ளேயே எண்ணிய எண்ணியாங்கு எய்துகின்றார்கள். தூக்கம் வராமலோ, கனவு காணாமலோ இருப்பவர்களுக்கு இறைவன் அருள் இல்லை என்று தெளிகிறார்கள். அதற்காக அடுத்த வருஷமும் வருகிறார்கள்.