பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. வேலூர் ஜலகண்டேச்வரர்

பாண்டிய மன்னனின் அமைச்சராய் அமைந்த வாதவூரர், மன்னவன் படைக்குக் குதிரைகள் வாங்கத் திருப்பெருந்துறை செல்கிறார். அங்கு குருந்த மரத்தடியில் இறைவன் தன் சீடர்களுடன் எழுந்தருளியிருப்பதைக் கண்டதும், வந்த காரியத்தை மறந்து அங்கேயே உட்கார்ந்து விடுகிறார். கொண்டு வந்த பணத்தை எல்லாம் திருக்கோயில் கட்டுவதிலே செலவு செய்கிறார்.

மன்னன் விடுத்த ஏவலாளர் வந்து வாதவூரரை அழைத்துச் செல்ல, இறைவன் அவருக்காக நரிகளைப் பரிகளாக்கிக் கொணர்கிறான். பின்னர் பரிகளையே நரிகளாக்கிப் பெரிய கலாட்டா செய்கிறான். வாதவூரர் இதனால் எல்லாம் துயர் உற்ற போது, அவருக்காக மண் சுமந்து பாண்டியனிடம் பிரம்படி படுகிறான்.

இத்தனை அனுபவமும் பெற்றபின், வாதவூரர் திருவாசகம் பாடுகிறார். மணிவாசகர் எனப் புகழ் பெறுகிறார். அவர் வாழ்க்கையில் நடந்த இத்தனை காரியங்களும் அரிய அற்புதங்கள்தானே. வாழ்க்கைக் கடலில் சிக்குண்டு கலங்கிய தன்னை, இறைவன் ஆட்கொண்டு, அற்புதங்கள் நிகழ்த்தியதை எல்லாம் நினைக்கிறார். பாடுகிறார்.

வணங்கும் இப்பிறப்பு இறப்பு இவை
நினையாது மங்கையர் தம்மோடும்
பிணைந்து, வாயிதழ்ப் பெரு வெள்ளத்து
அழுந்தி நான், பித்தனாய்த் திரிவேனை
குணங்களும் குறிகளும் இலாக்
குணக்கடல் கோமளத் தொடும்கூடி
அணைந்து வந்துஎனை ஆண்டுகொண்டு
அருளிய அற்புதம் அறியேனே!