பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வேங்கடம் முதல் குமரி வரை

நாட்டு மன்னர் பொம்மி ரெட்டி புற்றினை அகற்றிப் புற்றிடங் கொண்ட பெருமானுக்கு ஒரு கோயில் கட்ட முனைகிறார்.

கோயில் கட்ட அடிகோலியது, சாலிவாகன சகாப்தம், சுக்கில வருஷம் (கி.பி.1274) பங்குனி மாதம் பத்தொன்பதாம் தேதி, வடநாட்டுச் சிற்பி பத்ரிகாசி இமாம் கோயில் கட்டும் பணியில் ஈடுபடுகிறான். கட்டி முடிய ஒன்பது வருஷங்கள் ஆகின்றன. ஜலகண்டேச்வரர் (ஆம், கண்டம் வரை ஜலத்துக்குள்ளேயே இருந்த மூர்த்தி அல்லவா?) அகிலாண்டேஸ்வரி பிரதிஷ்டையும் நடக்கிறது சிறப்பாக.

ஆனால், கோயில் கட்ட அடிகோலிய நாள் நல்ல நாளாக இல்லை என்று கண்டு சொல்லச் சிற்பி மகன் சிற்பியே வர வேண்டியிருக்கிறது பின்னால். அதனால் மனங்கவன்ற மன்னன் கோயிலைக் காப்பாற்றக் கோயிலைச் சுற்றியே ஒரு நல்ல அழகிய மதிலையும் கட்டுகிறான். இதனால் கோயிலைக் காப்பாற்ற முடிந்ததே ஒழிய, மன்னனுக்குக் கோயிலில் உள்ள மூர்த்தியை நிலை நிறுத்த முடியவில்லை.

பொம்மி ரெட்டிக்குப் பின்னால் தெங்கணிக் கோட்டை வேங்கட தேவமகாராயலு வேலுர் வட்டத்தை ஆளுபவனாக அமைகிறான். அவன் சந்ததியினர் பத்துப் பேர் இந்த ராயவேலூரில் இருந்து அரசாண்டிருக்கிறார்கள்.

பதினேழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வேலூரைப் பிஜப்பூர் சுல்தான்கள் கைப்பற்றி இருக்கின்றனர். கான்கானும், அவனுடைய மகன் முகம்மது கானும் ஆண்டு வந்த காலத்தில், கோயிலுக்குப்பழுதுநேரவில்லை. ஆனால் முகம்மது கானுக்குப் பின் வந்த அப்துல்லாவிடம், யாரோ மூர்த்தியின் பீடத்தின் கீழ் உயர்ந்த ரத்தினங்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பிடித்தது சனி, ஜலகண்டேச்வரரை. அவர் பீடத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். அகழியில் எறியப்பட்டிருக்கிறார்.