பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

85

பிஜப்பூர் சுல்தானின் ஆட்சி அதிக காலம் நீடிக்கவில்லை. மராத்திய மன்னர் ஆதிக்கம்பெற்றபோது, 1676இல்துக்கோஜிராவ் வேலூர்க் கோட்டையை முற்றுகையிட்டு, வெற்றி பெற்றிருக்கிறார். கோட்டையைக் கைப்பற்றியவர்கள் ஜலகண்டேச்வரரை அகழியிலிருந்து எடுத்துத் திரும்பவும் பிரதிஷ்டை செய்து பூஜையை எல்லாம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் ஜலகண்டேச்வரர்தான் கண்டங்களுக்கு உட்படுபவர் ஆயிற்றே! ஆதலால் இரண்டுவருஷம் கழியுமுன்பே சுல்தான்கள் திரும்பவும் படை எடுத்து, மராத்திய மன்னன் துக்கோஜியின் குமாரன் சிங்கோஜியை வெற்றி கண்டு, கோட்டையைக் கைப்பற்றி இருக்கிறார்கள். அவ்வளவுதான். ஜலகண்டேச்வரரது அபிஷேக ஆராதனைகள் நின்றிருக்கின்றன. இப்படியே அன்ன ஆகாரம் இல்லாமல் இருந்திருக்கிறார் இருபத்து ஒரு வருஷம்.

இப்படி உபவாசம் இருந்தபோதும் அவர் சும்மா இருக்கவில்லை. பழையபடி மராத்திய மன்னர்களை அழைத்திருக்கிறார். மராத்திய மன்னர் ஸ்ரீனிவாச ராவ் கோட்டையை முற்றுகை இட்டுக் கோயிலைக் கைப்பற்றி இருக்கிறார். இவரும் இவர் மகன் ராமராவும் ஆண்ட முப்பது வருவடி காலம் ஜலகண்டேச்வரருக்குயோக ஜாதகம். அதன்பின்தான் தகராறு.

1708இல் தாவூத்கான் மராத்தியர்களைத் திரும்பவும் முறியடித்து வேலூரைக் கைப்பற்றி இருக்கிறான். ஆர்க்காட்டு நவாபுகளான சதாதுல்லா கான், குலாம் அலிகான், பாக்கர் அலி முதலியவர்களின் ஆட்சிக் காலத்திலும் பூஜை நிற்கவில்லை. என்றாலும் அப்போது இருந்த மகம்மதிய அரசிளங்குமாரன் அழகில் சிறந்த உருத்திரகணிகை ஒருத்தியை விரும்பி, அவளைக் கோயில் பிராகாரத்திலேயே சந்தித்துப் பலாத்காரம் பண்ணியிருக்கிறான். அழகியாக இருந்த ஆரணங்கு நல்ல வீர மகளாகவும் இருந்திருக்கிறாள். அரசகுமாரனது உடைவாளையே யுருவி அவன் நெஞ்சில் பாய்ச்சி இருக்கிறாள். தன்னையுமே மாய்த்துக் கொண்டிருக்கிறாள்.