பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வேங்கடம் முதல் குமரி வரை

வண்மையால், கல்வியால்
மாபலத்தால், ஆள்வினையால்
உண்மையால் பாராள
உரிமையால் - திண்மையால்
தேர்வேந்தர் வான் ஏறத்
தெள்ளாற்றில் வென்றானோடு
யார்வேந்தர் ஏற்பார் எதிர்?


தெள்ளாற்றில் வென்றான் என்ற பெயர் நந்திவர்மனுக்கு நிலைத்தது போல, சேயாற்றில் வென்றான் என்ற பெயரும் வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஒரு சிறு ஊருக்கு நிலைத்திருக்கிறது. இந்தச் சேயாற்றில் வென்றவன் வேறு யாருமில்லை. சமயக் குரவர்களில் முதல்வரான ஆளுடைய பிள்ளையாம் ஞானசம்பந்தரே. அந்த வரலாறு என்ன என்று தெரிந்துகொள்ளச் செய்யாறு என்று இன்று வழங்கும் திருவோத்தூர் என்னும் தலத்துக்குப் போகிறோம்.

இள வயதினராக இருந்த ஞானசம்பந்தர், நாட்டில் பரவி இருந்த புறச் சமயத்தினராம் சமணரோடு வாதிட்டு வெற்றி காண வேண்டியவராகவும் இருந்திருக்கின்றார். மதுரையில் சமணர்களோடு கனல் வாதம், புனல் வாதம் எல்லாம் புரிந்து, அவர்களை வென்று, அங்கிருந்து ஆண்ட கூன்பாண்டியனின் கூனை (உடலில் உள்ள கூனையல்ல, உள்ளத்தில் உள்ள கூனையே) நீக்கி, அவனைச் சுந்தரபாண்டியனாக்கி, அவனது மனைவி மங்கையர்க்கரசி, அமைச்சர் குலச்சிறை முதலியவர்களால் வணங்கித் துதிக்கப் பெற்றவர் அவர் என்பது வரலாறு.

இந்தச் சமணர்கள் அவரை இத்துடன் விட்டுவிடவில்லை. பாண்டிய நாடு, சோழ நாடு எல்லாவற்றையும் சுற்றிவிட்டுத் தொண்டை நாட்டிலே உள்ள திருவோத்தூர் என்னும் தலத்துக்கு வந்தாலும், அங்கேயும் சமணர்கள் ஆதிக்கம்