பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

95

வேதத்தை விரித்து ஓதுகிறார். வேதம் ஓதுவித்த ஊர் ஓத்துர் எனப் பெயர் பெறுகிறது. இதை இறைவனே சொல்லுவதாகக் காஞ்சிப் புராணம் கூறும்.

தத்து நீர் அலைபுரட்டும் சேயாற்றின்
தடங் கரைக்கண், இமையோர் கட்கும்
மெய்த்தவர்க்கும், ஓதுவித்தோம் ஆதலினால்
மேவு திருவோத்தூர் என்றும்
அத்தலத்தில் எமைத் தொழுவோர்
அருமறை நூல் முழுதுணர்ந்து வீடுசேர்வர்

என்பது பாட்டு. இனி அந்த மறைகளே விரும்பியபடி, வேத ஒலிகளை எல்லாம் சிவபெருமான் தமது டமருகத்தில் அடக்கி, அந்த டமருகத்தை ஒலித்துக் கொண்டு வீர நடனம் ஆடிய தலமும் இதுவே என்று தல வரலாறு கூறும்.

சேயாற்றுக் கோயில்

கோயிலில் உள்ள நடராஜரது திரு உருவில், வீர நடனத்தின் புதிய சாயை ஒன்றும் இல்லைதான். என்றாலும் அங்கு வீர நடனம் ஆடும் பெரிய பிள்ளை உண்டு. கோயில் கோபுரவாயிலைக் கடந்து, அதற்கடுத்த வாயிலையும் கடந்து, வெளி மண்டபத்தையும் கடந்து, உட்கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பிள்ளையாரை வெளியே நிறுத்தி இருக்கிறார்கள்.