பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வேங்கடம் முதல் குமரி வரை

அரண்மனை சென்று அங்கு கட்டியிருந்த ஆராய்ச்சி மணியையே அடிக்கிறது. அதற்கு ஒரு நம்பிக்கை, நீதி தவறாத மனுச்சோழன் தனக்கும் நீதி வழங்குவான் என்று. சோழ மன்னன் விவரம் அறிகிறான். மந்திரி பிரதானிகளைக் கேட்கிறான். அவர்களோ கன்றை இழந்த பசுவின் துயரத்துக்கு மாற்றுச் சொல்பவர்களாக இல்லை. கன்றைக் கொன்ற பாவம் தீரப் பிராயச்சித்தங்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசனோ இதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை. பசு படுகின்ற துயரத்தைத் தானும் பட்டால்தான் . சரியான நீதி வழங்கியதாகும் என நினைக்கிறான். அதற்காகத் தன் தேரைக் கொண்டு வரச் சொல்கிறான். அந்தத் தேர்க்காலில் தன் மகனைக் கிடத்தி, தன்தேரை அவன்மீது ஏற்றுகிறான். எவ்வளவு மனோதிடம் வேண்டும் இப்படிச் செய்ய? நீதி வழங்கும் ஆர்வம் எவ்வளவு அவனுக்கு இருந்திருக்க வேண்டும்?

திருவாரூர் உறையும் வன்மீகநாதன் இதனையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பானா? உயிர்பிரிந்த ஆன்கன்று, அரசிளங்குமரன் எல்லோரையுமே உயிருடன் எழுப்பியிருக்கிறான். மனு நீதிச் சோழன் புகழ் நிலைக்கிறது திருவாரூராம் தெய்வத் திருநகரிலே. அந்தத் திருவாரூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருவாரூர் செல்வது சிரமமே இல்லை. திருவாரூர் ஜங்ஷனுக்கு ஒரு டிக்கட் வாங்கவேணும். ரயிலில் சென்று இறங்கவேணும். வண்டியோ காரோ அமர்த்திக்கொண்டு ஸ்டேஷனிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள கோயிலுக்குச் செல்ல வேணும். அவ்வளவுதான். சாதாரணமாகத் தெற்கு வாயிலிலேயே கொண்டுதான் வண்டிக்காரன் வண்டியை அவிழ்ப்பான். எல்லோரும் வழக்கமாகப் போகும் அந்தத் தெற்கு வாயிலின் வழியாகவே நாமும் நுழையலாம் கோயிலுள். கோவில்கள் நிறைந்திருக்கும் தஞ்சை ஜில்லாவிலே மிகப் பெரிய கோவில்கள் இரண்டு தான். ஒன்று