பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும்; புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும்; சரித்திர நிகழ்ச்சியானால் அவசியமானபோது புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்து விடுவோம்; பாடல்களானால் அமைதியாக இருந்து பார்த்தால் தான் விளங்கும் என்ற அச்சம் உண்டாகும். இந்த நூலில் இவை எல்லாம் இருக்கின்றன. ஆனால் படித்து முடித்து விடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன; படித்த பிறகோ பல தலங்களுக்குப் போய்ப் பல மூர்த்திகளை வழிபட்டு வந்த மனநிறைவு உண்டாகிறது. காசு இல்லாமல், பிரயாண அலுப்பு இல்லாமல், தேங்காய்பழம் இல்லாமல் இந்தப்பயன் நமக்குக் கிடைக்கிறது. நாம் அங்கே போய்த் தரிசித்தாலும் இத்தனை விவரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.

நாவுக்கரசருக்குத் திருவையாற்றில் சிவபெருமான் கைலத் தரிசனம் காட்டியதை, 'இந்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம்! 'டெலிவிஷன் எக்ஸ்பர்ட்' ஆக ஒருவன் அன்றே இருந்திருக்கிறான். நம்மிடையே அவன் யார்?" என்று கேள்வி கேட்டுக்கொண்டு விளக்குகிறார். நாவுக்கரசராவது திருவையாற்றுக்குப் போய்க் கைலைக் காட்சியைக் கண்டார். நாமோ இருந்த இடத்தில் இருந்தபடியே இத்தனை தலங்களையும் காணுகிறோம்; சொல்லால் படித்துச் சொல்வது போதாதென்று அழகழகாகப் படங்களையும் எடுத்து இணைத்திருக்கிறார் அன்பர் திரு. பாஸ்கரன்.

இவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? மனமார நாவார, “சபாஷ்” என்று ஆனந்தப் பொங்கலுக்கு அறிகுறியாக ஒரு வார்த்தையைச் சொல்வதையன்றி வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

சென்னை
30-8-61

கி. வா. ஜகந்நாதன்.
ஆசிரியர் கலைமகன்