பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வேங்கடம் முதல் குமரி வரை

தாம் பெட்டியைப் பறிகொடுத்த விவரத்தை “லண்டன் டைம்ஸ்' பத்திரிகையிலே எழுதினார். அன்று முதல் கும்பகோணத்துக்கு ஓர் அவப் பெயர். கும்பகோணம் என்றாலே ஏதோ தகிடுதத்தம் செய்கிற ஊர் என்றாகிவிட்டது. ஏதாவது ஏமாற்றுக் கச்சவடம் செய்கிறவர்களைப் பார்த்து 'என்ன கும்பகோண வேலையைக் காட்டுகிறாய்?” என்று சொல்கின்ற பழக்கமும் வந்துவிட்டது. ஏன்? கும்பகோணம் என்றாலே ஏமாற்றுதல் என்ற பொருள் என்று ஆக்ஸ்போர்ட் அகராதிக்காரர்களும் எழுதிவைத்து விட்டார்கள். கும்பகோணம் இப்படிப் பிரபலமடைந்துவிட்டது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலே. ஆனால் கும்பகோணம் எவ்வளவு கற்பகோடி காலமாகப் புராணப் பிரசித்தி, சரித்திரப் பிரசித்தி எல்லாம் பெற்ற ஊர் என்பதைக் கும்பகோண மகாத்மியத்தைப் புரட்டிப் பார்த்தவர்கள் அறிவார்கள்.

கும்பகோணம், தஞ்சை ஜில்லாவில், தலை நகராம் தஞ்சையைவிடப் பெரிய ஊர். அந்த நகரின் மத்தியிலே காவிரி ஓடுகிறது. அந்தக் காவிரியின் கரையிலே நெல்லும் வாழையும் செழித்து வளர்கின்றன. அங்கே தான் தென்னிந்தியக் கேம்பிரிட்ஜ் என்ற பெயர் பெற்ற சர்க்கார் கலாசாலை இருக்கிறது. சர். பி. எஸ். சிவசாமி அய்யர், சர். சி. பி. ராமசாமி அய்யர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் முதலிய பேரறிஞர்கள் படித்த கல்லூரி அது. கணித மேதை ராமானுஜம் படித்ததும் அங்கே தான் என்பார்கள், காஞ்சி காமகோடி பீடத்தின் தலைமைக் காரியாலயமும் இங்கே தான். கும்பகோணம் என்றாலே அறிவின் பிறப்பிடம், மேதைகளை வளர்க்கும் பண்ணை என்றெல்லாம் புகழ். கும்பகோண வக்கீல் என்றாலே வல்லடி வழக்கில், அகடவிகட சாமார்த்தியத்தில் எல்லோரையும் விஞ்சியவர்கள் என்ற பிரபலம். இவையெல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் காலூன்றியபின் கும்பகோணம் - பெற்ற