பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வேங்கடம் முதல் குமரி வரை

கொள்ளும் வகை வேண்ட, அவரும் இந்தக் காவிரிக் கரையில் உள்ள தீர்த்தக் கட்டத்துக்கு குரு சிம்மராசியில் இருக்கும் நாளன்று வரச் சொல்கிறார். அன்று இங்குள்ள மகாமகக் குளத்துக்கு நவ கன்னியரும் வந்து சேர்ந்து கூடிக் கும்மாள மிடுகின்றனர். அந்தக் கும்மாளத்தோடு கும்மாளமிட்டுக் குளிக்கும் மக்கள் பாவமுமே கரைந்து விடுகிறது என்பது வரலாறு. இத்தகைய பிரசித்தி உடைய தீர்த்தம் இருக்கும் கும்பகோணத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

கும்பகோணம் போக, எந்த ஊரில் இருந்தும் டிக்கட் வாங்கலாம். நேரே ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கலாம். ஸ்டேஷனைக்கூட இப்பொழுது விஸ்தரித்துக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஸ்டேஷனில் இறங்கியதும் வண்டி பிடித்துக் கொள்ளலாம். ஊருக்குள் செல்ல இரண்டு வழி உண்டு. ஒன்று வட பக்கமாகவும், மற்றொன்று தென் பக்கமாகவும் செல்லும். நாம் தென் பக்கமாகச் செல்லும் பாதையிலேயே போகலாம். - கும்பகோணத்தில் நாம் முதல் முதல் காண வேண்டியது மகாமகக் குளந்தானே. வண்டியில் ஏறி நான்கு பர்லாங்கு தூரம் கடந்ததுமே நாம் மகாமகக் குளக்கரை வந்து விடுவோம்.

இந்தக் குளம் பெரிய குளம். கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஏக்கர் விஸ்தீரணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நல்ல படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டிருகிறது. இதன் நான்கு கரைகளிலும் பதினாறு சிவ சந்நிதிகள் இருக்கின்றன. இக்குளத்தின் மத்தியில் ஒன்பது கிணறுகள் இருக்கின்றன. இந்த ஒன்பது கிணறுகளின் தான், முன் சொன்ன நவகன்னியர் மகாமகத்தன்று எழுகிறார்கள் என்ற நம்பிக்கை. இந்தத் தீர்த்தத்துக்கு இந்தப் புனிதம் ஏற்பட்டதற்குக் காரணம் இதில் அமுதம் தங்கியது என்று ஒரு வரலாறு. அந்த வரலாற்றிலே தான் இந்தத் தலத்தின் பெயராம் குடமூக்கு, அத்தலத்தில் : உள்ள மூர்த்தியாம் கும்பேசுரரைப் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.