பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

5

பிரம்மதேவருக்கு அவருடைய சிருஷ்டித் தொழிலுக்கு உதவியாக இருந்திருக்கிறது இறைவன் அருளிய அமுதக் குடம். அந்தக் குடத்தைப் பத்திரமாக அவர் மகாமேரு பர்வதத்தில் வைத்திருந்திருக்கிறார், பிரளய காலத்தில் உலகமே பிரளயத்தில் முழுகிய போது, இந்தக் குடம் வெள்ளத்தில் மிதந்திருக்கிறது. வெள்ளம் வடிகிற போது, இந்தக் குடம் ஓர் இடத்திலே வந்து தங்கி இருக்கிறது. பிரமனது வேண்டுகோளின்படி, சிவபெருமான் வேட வடிவத்தில் வந்து அம்பு எய்து இந்தக் குடத்தைச் சோதித்திருக்கிறார். குடத்தினின்றும் அமுதம் வழிந்து ஓடியிருக்கிறது. உடைந்த குடத்து ஓடுகளையும், சிந்திய அமுதத்தையும் சேர்த்துச் சிவலிங்கமாக ஸ்தாபித்திருக்கிறார் சிவபெருமான். கும்பத்திலிருந்து தோன்றிய பெருமான் ஆனதினாலே கும்பேசர் என்ற பெயர் பெற்று அங்கே நிலைக்கிறார். ஊருமே கும்பகோணம் என்று பெயர் பெறுகிறது.

குடத்திலிருந்து சிந்திய அமுதம் வழிந்த இடத்திலேதான் மகாமகக் குளம் இருக்கிறது. அதனால்தான் அங்கு பெருகும் தீர்த்தத்திற்கு அத்தனை மகிமை; ஆதலால் நாமும் ஒரு முழுக்குப் போடலாம் அங்கே. அதற்குத் துணிவு இல்லாதவர்கள், மகாமகக் குளத்து நீரைத் தலையில் பரோக்ஷித்துக் கொண்டே கிளம்பிவிடலாம், ஊரில் உள்ள கோயில்களைக் காண, ஒருநாளை சிவனுக்கு என்றும் ஒருநாளை விஷ்ணுவுக்கென்றும் ஒதுக்கி வைத்து விடலாம். முதலில் மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள குடந்தைக் காயாரோகணத்தாரையே வணங்கிவிட்டு மேல் நடக்கலாம். இவரையே காசி விசுவநாதர் என்று மக்கள் அழைக்கிறார்கள்.

இராவணாதி அரக்கர்களை வதம் செய்யப் புறப்பட்ட ராமன் அத்தொழிலை நன்கு நிறைவேற்றத் தம்மிடம் ருத்திர அம்சம் இல்லை என்பதைக் காண்கிறார். அந்த அம்சம் பெறவேண்டிக் காவிரிக் கரையிலே காசி விசுவநாதரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார். ராமன் விரும்பிய

வே.மு.கு.வ - 2