பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வேங்கடம் முதல் குமரி வரை

வண்ணமே ராமனது உடலில் சிவன் ஆரோகணிக்கிறார். அதனால் இராவண வதம் முட்டின்று முடிகின்றது என்பது புராணக் கதை, ராமனது. காயத்தில் ஆரோகணித்தவர் ஆதலால் காயாரோகணர் என்ற பெயர் பெறுகிறார். இந்தக் காயாரோகணத்தார் சந்நிதி மேற்கு பார்த்து இருக்கிறது. சிறிய கோயில்தான். கோயிலில் நுழைந்ததும் வடபுறம் உள்ள ஒரு மண்டபத்தில் நதிகளாகிய நவகன்னியரும் நின்று கொண்டி ருக்கிறார்கள். தல முக்கியத்துவம் வாய்ந்தவளான காவிரி வாயிலுக்கு நேரே நின்று கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் பக்கத்துக்கு நால்வராக ஒதுங்கிக் கொள்கிறார்கள். எல்லாம் சுதையாலான வடிவங்களே.

மகாமக உற்சவத்தில் எழுந்தருளச் செய்வதற்காகச் செப்புச் சிலை வடிவிலும், இந்த நவ கன்னியரைச் சிறிய உருவில் சமீப காலத்தில் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தச் செப்புப் படிமங்கள் ஒதுக்குப் புறத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். அவர்களைத் தேடித்தான் பார்க்க வேண்டும். இனிக் கோயிலுள் இருக்கும் விசுவநாதரையும் விசாலாக்ஷியையும் வணங்கலாம். இந்தக் கோயிலுக்கு சம்பந்தர் வந்து காயாரோகணத்தாரைப் பாடிப் பரவி இருக்கிறார். சம்பந்தர் குறிப்பிடாத மகாமகத் தீர்த்த விசேஷத்தைச் சேக்கிழார் கூற மறக்கவில்லை . 'பூமருவும் கங்கை முதல் புனிதமாகப் பெருதீர்த்தம் மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடுங் கோயில்' என்றல்லவா பாடுகிறார்.

இந்தக் குடந்தைக் காரோணத்தாரைக் காண மறந்தாலும், இவரது கோயிலுக்கு மேற்கே ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள குடந்தைக் கீழ்க் கோட்டனாரைக் கண்டு தரிசிக்காமல் மேல் நடத்தல் கூடாது. இது ஒரு கலைக் கோயில். இங்கு கோயில் கலையின் பலபடிகளைப் பார்க்கலாம். இங்கு கோயில் கொண்டிருக்கும் நாகேசுவரனை இந்திரனும் சூரியனும் வழிபட்டதாக ஐதீகம். இந்திரன் வழிபட்டானோ என்னவோ? சூரியன் இன்றும் வழிபடு