பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூடிய அந்தக் கோயிலின் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தாலே நம் கழுத்து வலிக்கும். பெருமாள் சந்நிதியும் முன் மண்டபங்களும் ரதம்போல் அமைக்கப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் சக்கரங்கள். அவைகளை இழுத்துச் செல்லும் குதிரைகள். இதனால்தானோ என்னவோ திருமங்கைமன்னன் திருஎழுக்கூற்றிருக்கை என்று ஒரு ரதபந்தமே தனியாகப் பாடியிருக்கிறார்.

ஹேம ரிஷியின் தவத்தை மெச்சித் திருமால் கையில் சாரங்கம் ஏந்தி எழுந்தருளினார் என்றும் கோமளவல்லித் தாயாரை மணந்து கொண்டார் என்றும் தலவரலாறு. கோயிலின் பின்புறமுள்ள ஹேம் புஷ்கரணிக் கரையில் ஹேம முனிவருக்கு ஒரு சிறிய சந்திதி இருக்கிறது. இந்தச் சாரங்கபாணியை ஏழு ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள். திருமழிசை ஆழ்வார் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். ஆரா அமுதனை வணங்கியிருக்கிறார். ஆரா அமுதன் அயர்ந்த நித்திரையில் இருந்திருக்கிறான். தான் வந்து நிற்பதை அவன் அறிந்து கொண்டதற்கு யாதொரு. குறிப்பும் இவருக்குத் தெரியவில்லை. 'ஐயோ! அவனுக்கு என்ன அலுப்போ ?' என்று அவர் எண்ணியிருக்கிறார். பாடியிருக்கிறார்.

நடந்த கால்கள் நொந்தவோ?
நடுங்கும் ஞாலம் ஏனமாய்
இடந்தமெய் குலுங்கவோ?
விலங்குமால் விடைச்சுரம்
கடந்தகால பரந்த காவிரிக்
கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து
பேசு ஆழிகேசனே.

படுக்கையினின்றும் எழுந்திருக்கும் கோலத்திலேயே காட்சி கொடுக்கிறான். இதனையே உத்தான சயனம்