பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வேங்கடம் முதல் குமரி வரை

சமேதனாகப் பட்டாபிஷேகக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறான். எல்லாம் நல்ல கம்பீரமான செப்பு வடிவங்கள், இவைகள் எல்லாம் பக்கத்தில் உள்ள தாராசுரப் பகுதியில் புதைந்து கிடந்தன என்றும், ராமனே தஞ்சை மன்னர் அச்சுத நாயக்கன் கனவில் தோன்றித் தான் இருக்கும் இடத்தை அறிவித்தான் என்றும் அதன் பின்னரே அச்சுத நாயக்கன் அந்த விக்கிரகங்களை எடுத்துக் கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்தான் என்றும் அறிகிறோம்.

இக்கோயிலில் நுழைந்ததுமே, அங்குள்ள மகாமண்டபம் ஒரு பெரிய கலைக்கூடம் என்பதைக் காண்போம். மண்டபம் முழுவதும் பிரும்மாண்டமான தூண்கள். எல்லாம் நுணுக்க வேலைப்பாடு அமைந்தவை. ஒரு தூணின் நான்கு பக்கத்திலும், பக்கத்துக்கு ஒருவராக ராமன், லக்ஷ்மணன், சீதை, அனுமன் காட்சி கொடுக்கிறார்கள். நல்ல கருங்கல் உருவிலே கம்பீரமான திருஉருவங்கள் அவை. இவை தவிர ராம பட்டாபிஷேகம், விபீஷண பட்டாபிஷேகக் காட்சிகள் வேறே அடுக்கடுக்காய் இருக்கின்றன; விஷ்ணுவின் பல அவதாரக் கோலங்கள், திரிவிக்கிரமன் தோற்றம் எல்லாம். இன்னும் மன்மதன், ரதி, எண்ணற்ற பெண்ணுருவங்கள் எல்லாம் கல்லில் வடிக்கும் கட்டழகு எப்படி இருக்கும் என்பதைக் காட்டும். இந்தக் கலைக்கூடத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் பலமணி நேரம். மகா மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் ராமாயணக் கதை முழுவதையும் 200 சித்திரங்களில் தீட்டி வைத்திருக்கிறார்கள். இவைகள் எல்லாம் சமீபகாலத்தில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இங்குள்ள சித்திரங்களெல்லாம் அஜந்தா, சித்தன்ன வாசல் சித்திரங்களோடு வைத்து எண்ணப்படத் தக்கவை - அல்லதான் என்றாலும் ராமசாமி கோயில் என்பதற்கேற்ப, ராமாயணச் சிற்பங்கள் இருப்பது பொருத்தமானதே. இன்னும் கடந்து கருவறை சென்றால் ராமனைப் பட்டாபிஷேகக் கோலத்தில் பார்க்கலாம்.