பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வேங்கடம் முதல் குமரி வரை

மைல் மேற்கு நோக்கிச் சென்றாலும் தலத்துக்கு வந்து சேரலாம். ரயிலில் செல்பவர்கள் எல்லாம் சுவாமிமலை ஸ்டேஷனிலே இறங்கி ஒரு. மைல் வடக்கு நோக்கிச் சென்றாலும் சென்று சேரலாம். நாம் ரயிலிலேயே போகலாம். அதுதானே சௌகரியமானது. ஸ்டேஷனில் வண்டிகள் கிடைக்கும். வண்டியைவிடக் கால் வண்டியே சிறப்பானது. காலாலே நடந்து சென்றால் இன்னொரு கோயிலையும் பார்த்து விடலாம். தம்பியைக் கண்டு தரிசிக்கப் போகிறவர்கள் அண்ணனைத் தரிசிக்காமல் போகலாமா? அப்படி நேரே வருவதைச் சுவாமிநாதனே விரும்ப மாட்டானே, அவன் சூடு கண்ட பூனையாயிற்றே. வள்ளியை மணக்க விரும்பிய போது அண்ணனை மறந்தது காரணமாகத்தானே. அவனுக்கு இடையூறுக்குமேல் இடையூறு நிகழ்ந்தது. பின்னர் அண்ணன் விநாயகரை வணங்கியபின்தானே காதலில் வெற்றி பெறவும் முடிந்தது.

ஆதலால் நாமும் வழியில் உள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்கி விடை பெற்று மேல் நடக்கலாம். இங்குள்ள விநாயகர் சுவேத விநாயகர் என்னும் வெள்ளை நாயகர், மூர்த்தி சிறிதுதான் என்றாலும் கீர்த்தி பெரிது. அமுதக்கலசம் கொண்டு வந்தவர் என்ற புகழ் பெற்றவர். தேவேந்திரன் ஏரண்ட முனிவர் முதலியோர். வணங்கி அருள் பெற்றிருக்கிறார்கள். அந்தப் பழைய காலத்தில் காவிரி அங்கு வலம் சுழித்துச் சென்றிருக்கிறது. அதனால் வலஞ்சுழி என்று பெயர் பெற்றிருக்கிறது.

வெள்ளை விநாயகர் கோயில் மண்டபம் எல்லாம் மிக்கச் சிற்ப வேலைகள் நிறைந்தது. மண்டப வாயிலில் கல்லிலே செய்திருக்கும் வேலைகளை யெல்லாம் தூக்கி அடிப்பதாய் இருக்கிறது. இந்த விநாயகர் நிழலிலேயே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள கற்பகநாதரும் பெரியநாயகியும், இத் தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்.