பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வேங்கடம் முதல் குமரி வரை

குலோத்துங்கன் புதல்வனான பரகேசரி ராஜராஜன். கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர்வரை இவன் ராஜ்யம் பரவியிருக்கிறது. கொங்குநாடு கங்கநாடு எல்லாம் இவன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன. இவன் முதலில் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலை நகராகக் கொண்டு ஆண்டிருக்கிறான். பின்னர் பழைய பழையாறையைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து அரசாண்டிருக்கிறான். அந்தப் பழையாறையை ‘எண்டிசைத் தேவரும் புகுதும் ராஜராஜபுரி' என்றே தன் பெயரால் அழைத்திருக்கிறான்.

அவன் காலத்தில் போர் ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் தமிழ், சமஸ்கிருதம் கற்பதிலும், கலை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டியிருக்கிறான். 'முத்தமிழுக்குத் தலைவன்' 'ராஜ பண்டிதன்' என்ற விருதுப் பெயர்கள் பெற்றிருக்கிறான். அந்தப் பழையாறை வட்டத்தில் வடகீழ்ப் பகுதியில் ஒரு கோயில் எடுப்பித்து அதை ராஜராஜேச்சுரம் என்று அழைத்திருக்கிறான். அங்கு பிரதிஷ்டை செய்த இறைவனை. ராஜராஜேச்சுரமுடையார் என்றே வணங்கி யிருக்கிறான்,

ஒரு மருங்குடைய மூல நாயகி
ஒற்றை வெள்விடை ஊர்திமேல்
இரு மருங்கு மறை தொழ
எழுந்தருள் இராசராசபுரி ஈசனே

என்று அவனது அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் இந்த இறைவனைப் பாடியிருக்கிறார். இந்த ராசராசபுரி ஈசுவரரே புராணம் பாடியவர்களால் ஐராவதேசுவரர் என்று பாராட்டப்பட்டிருக்கிறார். ராஜேசுவரமே நாளடைவில் ராராசுரம் என்று திரிந்து பின்னர் தாராசுரம் ஆயிற்று. இது தலத்தைப் பற்றிச் சரித்திரம்