பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூறும் செய்தி. நாம் சரித்திரத்துக்கே மதிப்புக் கொடுக்கலாம். அதையே நம்பலாம். இந்தத் தாராசுரம் என்ற தலத்தில் உள்ள ஐராவதேசுவரரைக் காணவே இன்று சொல்கிறோம் நாம்.

தாராசுரம் செல்வது மிகமிக எளிது. கும்பகோணத்துக்கு அடுத்த தென்பக்கம் இருக்கும் தாராசுரம் ஸ்டேஷனில் இறங்கினால் அங்கிருந்து கூப்பிடு தொலையிலேயே கோயில் இருக்கிறது. கோயிலை இனம் கண்டு பிடிப்பதும் எளிது. கலசம், ஸ்தூபி எல்லாம் இல்லாத விமானத்தோடு அந்த வட்டாரத்தில் இருக்கும் கோயில் இது ஒன்றுதான். இதை அடையாளமாக வைத்துக்கொண்டு இடையில் இருக்கும் தோப்பைக் கடந்தால் கோயில் வாயில் வந்து சேர்ந்து விடலாம். கோயில் எடுப்பித்த காலத்தில் பல பிராகாரங்கள் எல்லாம் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஒரு மதில் சிதைந்து கோயில் வாயிலுக்குக் கிழக்கே இன்றும் இருக்கிறது. இடிந்து கிடக்கும் அந்த மதிலைப் பார்த்தே அது எவ்வளவு கம்பீரமாக எழுந்திருக்கவேண்டும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

இக்கோயில் வாயில் எப்போதும் திறந்திருக்காது. அர்ச்சருக்குச் சொல்லி விட்டுத்தான். அவரை வருவிக்சு வேண்டும். அதுவரை கோயில் வாயிலுக்கு வெளியே இருக்கும் பலிபீடத்தையும் நந்தியோடு கூடிய மண்டபத்தையும் பார்க்கலாம். நந்தி எழுந்து எங்கே ஓடி விடுகிறதோ என்று மூங்கில் தட்டி வைத்துக் கட்டிப் பதனப்படுத்தியிருப்பார்கள். அர்ச்சகர் வந்து நாம் கலை அழகைக் காண வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டால், அந்தப் பலி பீடத்தையே பல இடங்களில் தட்டி அதில் சப்த ஸ்வரமும் பேசுகிறது என்பார். நமக்கு ஸ்வரங்களில் எல்லாம் வித்தியாசம் தோன்றாது. 'இது கூடத் தாரன் கதை போலத்தானோ?' என்று எண்ணத் தோன்றும். ஆனால் கோயிலுள் நுழைந்தால் எவ்வளவோ