பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதிசயம் காத்து நிற்கும். கோயிலுள் கருவறையில் இருப்பவர் ஐராவதேசுவர்.

துர்வாச முனிவர் சாபத்தால் தேவேந்திரனது ஐராவதத்தின் நிறம் மாற அதனால் மனக் கவலையுற்ற ஐராவதம் இத்தலத்துக்கு வந்து இங்குள்ள இறைவனைப் பூசித்துப் பேறுபெற்றிருக்கிறது. அன்று முதல் இறைவனே ஐராவதேசுவரர் என்ற பெயரில் நிலைத்து விடுகிறார். மேலும் முனிவர்களது கோபத்துக்கு ஆளாகிய அந்த யமதருமனுக்கு வெம்மை நோய் வர, அந்நோய் தீர அவன் பல தலங்களுக்குச் சென்று அலைந்து கடைசியாக இங்கு வந்து சிவபெருமானின் திரிசூலம் ஊன்றிய இடத்தில் தோன்றிய திருக்குளத்தில் மூழ்கி வெம்மை நோய் தீர்ந்தான் என்று புராணம் கூறும்.

இந்தப் புராண வரலாறுகளைத் தவிர வேறு சிறப்பான வரலாறு இந்தக் கோயிலைப்பற்றி இல்லைதான். ஆனால் கோயில், கோயில் அமைப்பு, அங்குள்ள சிற்பச் செல்வங்கள் எல்லாம் ஒரு நாளில் பார்த்து அனுபவித்து விட்டுத் திரும்பி விடக் கூடியவை அல்ல. பல நாட்கள் அங்கே தங்கியிருந்து ஒவ்வொன்றையும் அங்குலம் அங்குலமாகப் பார்த்துக்களிக்க வேண்டியவை. ஆதலால் கொஞ்சம் ஆற ஆமரவே இருந்து பார்க்கலாம் இச்சிற்ப வடிவங்களையெல்லாம்.

கோயில் வாயிலில் நுழைந்ததும் நேரே கருவறைக்குச் சென்றுவிட முடியாது. கோயில் ஒரு சிறிய அளவில் மாடக் கோயிலாக இருக்கும். கோயில் மாடத்தில் ஏறத் தெற்கு நோக்கிக் கொஞ்சம் நடந்து, அதன் பின்னரே மேற்கு நோக்கிப் படிகளில் ஏறவேண்டும். தெற்கு நோக்கி நடக்கும்போதே கிழக்கே பார்த்த ஒரு மாடத்தில் ஒரு கற்சிலை நிற்கும், பார்த்ததும் அதனை அர்த்தநாரியின் வடிவம் என்று கருதுவோம். இடப்பக்கம் மாத்திரம் விம்மிப் புடைத்திருக்கும் மார்