பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

35

ரிஷிபத்தினிகளும் இருந்திருக்கிறார்கள். இவர்களோடு திரிபுராந்தகர், கஜசம்ஹாரர் எல்லாம் நல்ல கல்லுருவில் ஆஜானுபாகுவாக நின்றிருக்கிறார்கள். இவர்கள் தலையில் மண்டபங்கள் விழுந்து விடக் கூடாதே என்று பக்குவமாக அவர்களை அடிபெயர்த்துத். தஞ்சையில் உருவான கலைக்கூடத்துக்கே கொண்டு சென்றிருக்கிறார்கள். தஞ்சை செல்லும்போது அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

இத்தனையும் பார்த்துவிட்டோமே, இங்கே அம்பிகை கோயில் இல்லையா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அம்பிகையாம் தெய்வநாயகிக்குத் தனியாக ஒரு கோயில் வடக்கே நூறு கஜ தூரத்தில் இருக்கிறது. இது நிரம்பப் பெரிய கோயில் அல்ல. சிற்ப வடிவங்கள் நிறைந்ததும் அல்ல. செல்வத்தையெல்லாம் தான் அள்ளிக் கொட்டி விட்டானே, ஐராவதேசுவரர் கோயிலிலேயே.

இக்கோயிலில் 52 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளுள் பெரும்பாலானவை இரண்டாம் 'ராஜராஜன், இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீரபாண்டியன் காலத்தியவையாகும். இவைகளை ஆராயுமிடத்து, இக்கோயில் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டுப் பின்னர் மூன்றாம் குலோத்துங்கனால் செப்பனிடப்பட்டிருக்கவேண்டும். கோயில் திருமாளிகைச் சுற்றுப் பகுதியில் கீழ்ப்புறம், இக்கோயிலை எழுப்பிய இரண்டாம் ராஜராஜன் அவனுடைய பட்டமகிஷி புவன முழுதுடையாள் இவர்களது சிலைகள் இருந்திருக்கின்றன. அவர்களையுமே எடுத்துச் சென்று விட்டார்கள் இந்தத் தஞ்சைக் கலைக்கூடத்தார். கோயிலின் கருவறையின் புறச்சுவரில் 63 நாயன்மார் வடிவங்களும் சைவ ஆச்சாரியார் 108 வடிவங்களும் இருக்கின்றன. பெரிய புராண வரலாறுகளை ஆராய்பவர்க்குப் பெரிதும் பயன்படும்.