பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


“வேங்கடம் முதல் குமரிவரை” என்ற தொடரின் மூன்றாவது புத்தகம் இது. 'பாலாற்றின் மருங்கிலே' என்ற முதல் புத்தகத்தையும், 'பொன்னியின் மடியிலே' என்ற இரண்டாவது புத்தகத்தையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்தனர். அது காரணமாகவே இந்த மூன்றாவது புத்தகத்தைக் 'காவிரிக் கரையிலே' என்ற தலைப்போடு வெளியிட முற்படுகிறேன் நான்.

தமிழ் நாட்டில் கோயில்கள் பல இடங்களிலும் பரந்து கிடந்தாலும், காவிரியின் இருகரையிலும் தான் அவை அதிகமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன என்பதை அன்பர்கள் அறிவார்கள். இந்த மூன்றாவது புத்தகத்தில் கும்பகோணத்திலிருந்து தல யாத்திரை துவங்குகிறது. தெற்கே திருப்பெருந்துறைவரை சென்று மேற்கு நோக்கித் திரும்பி, கொங்குநாட்டுத் தலங்களுக்கு எல்லாம் சென்று கோவையை அடுத்த போரூரில் தலயாத்திரை நிறைவுறுகிறது. அடுத்த நான்காவது புத்தகம் பழநியில் துவங்கி பாண்டி நாட்டுத் தலங்கள் வழியாக, கன்னியாகுமாரியில் நிறைவுறும்.

கட்டுரைகள் தொடர்ந்து கல்கியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் பாராட்டி எழுதும் அன்பர் பலர். குறை கூறுவாரும் இல்லாமல் இல்லை. அதிலும் ஒன்றிரண்டு ஸ்ரீ வைணவர்கள், நான் சைவத்தையே உயர்த்திப் பேசுகிறேன் என்றும் வைணவத்தைத் தாழ்த்துகிறேன் என்றுகூடக் கருதுகிறார்கள். நான் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்ற வேறுபாடுகளை எல்லாம் பாராட்டாதவன். எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையுடையவன். கலைகளைக் கொண்டே கடவுளரை எல்லாம் கண்டு களிப்பவன். ஆதலால் இந்த ஆதாரமற்ற புகாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

சமீபத்தில் டில்லியில் இருந்து தென்னாடு வந்திருந்த தமிழ் அன்பர் ஒருவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி வந்து திரும்பியிருக்கிறார். அவர் டெல்லி திரும்பியபின் கல்கியில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. அதனைப் படித்துவிட்டு 'அடடா! இக்கட்டுரை முன்னரே வராமல் போய்விட்டதே! கட்டுரையைப் படித்தபின், அக்கோயிலில் பார்க்க வேண்டியவை என்ன என்னவோ இருக்கிறதே!