பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வேங்கடம் முதல் குமரி வரை

பொங்கலைவிட உப்பேசேர்க்காத சர்க்கரைப் பொங்கலையே நிவேதனம் பண்ணச் சொல்லி வாங்கி நாம் சாப்பிட்டால் போகிறது.) இப்படித் தான் இங்குள்ள பெருமாள் உப்பிலி அப்பன் என்ற பெயரோடு நிலைத்திருக்கிறார். இது தல மான்மியம் கூறும் வரலாறு. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது மற்றொரு வரலாறு. அது இதுதான். இத்தலத்துக்கு நம்மாழ்வார் வந்திருக்கிறார்.

என்னப்பன் எனக்காய் இருளாய்
என்னைப் பெற்றவனாய்
பொன்னப்பன், மணியப்பன்
மூத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ்
திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன்
தந்தனன் தன் தாள் நிழலே

என்று பாடியிருக்கிறார். தன்னை ஒப்பார் இல்லாத அப்பனாக அவன் விளங்குவதால் ஒப்பிலி அப்பன் என்று வழங்கப்பட்டிருக்கிறான். அந்த ஒப்பிவி அப்பனே நாளடைவில் திரிந்து உப்பிலி அப்பன் ஆகியிருக்கிறான் என்பர். கோயில் நிர்வாகிகள் விசாரித்தால் அவன் ஒப்பிலி அப்பன் மாத்திரமல்ல, உப்பிலி அப்பனும் கூடத்தான் என்பார்கள். நம்மாழ்வாருக்கு இத்தலத்துப் பெருமான் ஐவகைக் கோலம் காட்டியிருக்கிறான். அதனால் தானே பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என்றெல்லாம் பாடியிருக்கிறார். அவன் ஐந்து அப்பன் மாத்திரம் என்ன? ஆறு அப்பனாகவே இருக்கட்டுமே. நிர்வாகிகள் மனம் வருந்தாமல் இருக்க உப்பிலி அப்பனையுமே ஒப்புக் கொள்வோமே.

இனி நாம் கோயிலுள் நுழையலாம். நுழைந்ததும் கோயிலின் வடபுறம் இருப்பது 'அஹோராத்ர புஷ்கரிணி.'