பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வேங்கடம் முதல் குமரி வரை

சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ள விரைகிறான் இளைஞன். துணிந்து கன்னிப் பெண்ணின் வீட்டுக்கே வருகிறான்; பெண்ணும் தாயும் தனித்திருக்கும் நேரத்திலே 'தாகமாயிருக்கிறது; கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என்கிறான். வீட்டிற்குள் இருந்த அம்மாவும், பெண்ணை அழைத்து 'பெண்ணே! இந்தப் பையனுக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடம்மா' என்கிறாள். பெண்ணும் ஒரு சிறு! செம்பிலே தண்ணீர் எடுத்துக் கொண்டு தலைவாயிலுக்கு வருகிறாள். வந்திருப்பவனைப் பார்க்கிறாள். அவன் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டு வந்தவனா? அவன் கொஞ்சம் அவசரக்காரனும் கூட; ஆதலால் நீர் கொண்டு வந்த பெண்ணின் கையைப் பற்றித் தன் பக்கலில் இழுக்கிறான். எவ்வளவு தான் காதல் வயப்பட்டாலும், இப்படித் திடீரென்று ஆடவன் கையைப் பற்றினால் கன்னிப் பெண் சும்மா இருப்பாளா? ‘அம்மா இவன் செய்வதைப் பாரம்மா' என்கிறாள். வீட்டிற்குள்ளிருந்த அம்மா, மகள் சத்தம் கேட்டு ஓடிவருகிறாள்.

அதற்குள் மகள் சுதாரித்துக் கொள்கிறாள். காதலனைச் காட்டிக் கொடுக்கவில்லை. அம்மா என்ன? என்ன?' என்று கேட்க, 'ஐயோ? இவருக்குத் தண்ணீர் குடிக்கும் போது விக்கி விக்கிப்புரையேறி விட்டது அம்மா! நான் பயந்தே விட்டேன்' என்று ஒரு புதிய நாடகமே நடிக்கிறாள். அம்மாவும் அவள் வார்த்தையை உண்மை என நம்பி, அவன் முகத்தைத் தடவிக் கொடுக்கிறாள். அப்போது பயல் சும்மாவா இருக்கிறான்; அம்மாவுக்குத் தெரியாமல் பெண்ணைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரிக்கிறான். ஆம், அவள் உள்ளத்தையும் அவன் தெரிந்து கொண்டான் அல்லவா? இப்படி ஒரு நாடகம். இந் நாடகத்தை மறுநாள் தன்னைத் தேடிவந்த தன் தோழியிடம் பெண்ணே சொல்கிறாள், அப்படிச் சொன்னதாகக் குறிஞ்சிக் கலியில் கபிலர் பாடுகிறார்.