பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

63

சமைத்திருக்கிறார்கள். மண்டபம் அழகாயிருக்கிறது என்பது வாஸ்தவம். ஆனால் அந்த கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில் கட்டிடக் கலையோடு பொருந்துவதாக இல்லை. பரவாயில்லை. செய்ததை அழகாகச் செய்திருக்கிறார்களே என்று திருப்திப் பட்டுக் கொண்டே நடக்கலாம்.

கோயில் மிகவும் பெரிய கோயில், 690 அடி நீளம் 288 அடி அகலம் என்றால் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்துக் கொள்ளுங்களேன். இக் கோயில் விமானம் ஸ்ரீநிவாச விமானம் எனப் பெயர் பெறும். ஸ்ரீநிவாசன் மிகவும் மகிழ்ந்து உறையும் தலத்தில் உள்ள விமானம் ஸ்ரீநிவாச விமானமாயிருப்பது பொருத்தம் தானே. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். இது ஸ்ரீநிவாசனுக்கு மட்டுந்தான் உகந்த தலம் என்பதல்ல; அந்த ஸ்ரீதேவிக்குமே தேன் அனைய இருப்பானது பற்றித் தானே நறையூர் என்றே பெயர் பெற்றிருக்கிறது. புதிதாய்க் கட்டிய மண்டபத் தினின்றும் விலகி விமான தரிசனம் செய்தபின் படிக்கட்டுகள் ஏறிக் கல்யாண மண்டபத்தைக் கடந்து, திரும்பவும் படிக்கட்டுகள் ஏறியே கருப்பக்கிருக வாயிலுக்கே வரவேணும். அங்கே கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நிற்பவனே ஸ்ரீநிவாசன் என்னும் நறையூர் நம்பி. அன்று மேதாவி முனிவருக்கு ஆழியும் சங்கமும் ஏந்திய கைகளை முன்னே நீட்டிக்கொண்டு எழுந்தருளிய அவசரத்திலேயே நிற்கிறான். இவருக்கு இரண்டே கைகள்தான். காட்சி கொடுக்கத் துடித்த அவசரத்தில் தனக்கு நான்கு கைகள் உண்டு என்பதைக்கூட அல்லவா இவர் மறந்திருக்கிறார்!

இந்திரநீலமொத்த இருண்டமேனி, குன்றாடும் கொழுமுகில் போல், குவளைகள் போல், குரை கடல்போல், நின்றாடும் கமல மயில்போல் நிறமுடைய பெருமான் அவன் என்றாலும் மேனியெல்லாம் தங்கக் கவசமும், அழகான ஆபரணங்களும் அணிந்து கொண்டே சேவை சாதிக்கிறான்.