பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வேங்கடம் முதல் குமரி வரை

இவருக்குப் பக்கத்திலே வஞ்சுளவல்லி, மன்னும் மரகதக் குன்றின் அருகே ஓர் இளம் வஞ்சிக்கொடி நிற்பதுபோல நிற்கிறாள். இந்த நம்பியை அடுத்தே அன்று அவருடன் வந்த சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர், புருஷோத்தமர் நிற்கிறார்கள். மூலவருக்கு முன்னால் உற்சவர் இருக்கிறார், எல்லா இடத்திலும் பூதேவி ஸ்ரீதேவி சமேதனாக நிற்பவர் இங்கே வஞ்சுள வல்லியோடு மாத்திரமே நிற்கிறார். இந்த வஞ்சுளவல்லியும், 'இத்தலத்தில் எனக்கே பிரதானம்' என்பதைச் சொல்லிக் கொள்கிறவள் போன்று ஓர் அடி எட்டி எடுத்து வைத்து முன்வந்து நிற்கிறாள். இந்தக் கோயிலிலும் நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது. ஆம், நறையூர் நம்பியே, நாச்சியார் நிழலிலே ஒதுங்கித்தானே வாழ்கிறார்.

நம்பி, நாச்சியார் எல்லோரையும் வணங்கிவிட்டு வெளியே வரும்போது இத்தலம்தானே கருட சேவைக்குப் பேர்போனது, கருவறையில் கருடனைக் காணோமே என்று கேட்கத் தோன்றும். அதற்குள் அர்ச்சர்கள் நம்மை அந்தப் பக்ஷிராஜன் சந்நிதிக்கே கூட்டிச்சென்று விடுவார்கள். இவர் நல்ல கருங்கல் உருவினர். கல்கருடன் என்ற பெயர் பெற்றவர். வாகான வடிவம், நீள்சிறகு, நீள்முடி, அகன்ற மார்பு, ஆஜானு பாகுவான தோற்றத்தோடு விளங்குவார் தனிக்கோயிலில். இந்தக் கோயில் பத்தரை அடிச்சதுரமே உள்ள சிறிய கோயில் தான். அங்கிருந்து வெளியே நான்கு பேர் எளிதாக எடுத்து வந்து விடுவார்கள்.

அதன்பின் அந்தப்பொல்லாத கருடாழ்வாருக்கு எங்கிருந்துதான் பலம் வருகிறதோ தெரியவில்லை . பின்னர் வெளியில் எடுக்க வேண்டுமானால் எட்டுப் பேர்களாகவும் இன்னும் படிகள் இறங்கும்போது முப்பத்திரண்டு பேர்களாகவும் ஸ்ரீபாதம் தாங்குகிறவர்கள் வளர்ந்து கொண்டே போவார்கள். தறையூர் நம்பி ஆரோகணித்து வரும் நாச்சியார் கோயில் கருடசேவை கண்கொள்ளாக் காட்சியே. மார்கழி, பங்குனி மாதங்களில் நடக்கும் இந்தச்