பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளர்ந்தன. கோயிலில் ஊர்ச்சபை கூடியது; உடையவர் பண்டாரமாகிய கிராமப் பாங்கி இருந்தது; கல்விச்சாலை நடைபெற்றது. தேவாரமும் திவ்யப் பிரபந்தமும் இந்தக் கற்கோயில்களின் பெருமையை இலக்கியச் சுவையும் பக்திச் சுவையும் இணைந்த பாக்களால் புலப்படுத்தும் சொற்கோயில்களாக விளங்குகின்றன.

அயல் நாட்டினர் வந்து இவற்றைக் கண்டால் வியக்கிறார்கள்; படம் பிடிக்கிறார்கள் ; புத்தகம் எழுதுகிறார்கள்; நாம் அவர்கள் எழுதியதைக் கண்டு, 'அப்படியா' என்கிறோம். கோயிலுக்குள்ளே புகுந்து தீபாராதனையைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு விபூதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் அளவில் நம் வழிபாடு நிற்கிறது. திருக்கோயில்களில் உள்ள கலையுருவங்களைக் காணக் கண்ணும் அவற்றின் பெருமையைக் கேட்கக் காதும் எல்லோருக்கும் இருப்பதில்லை.

ஆனால், சில காலமாகக் 'கல்கி' பத்திரிகையில் வாரந்தோறும். திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதி வரும் 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொடர் கட்டுரைகளைப் படித்து வருகிறவர்களில் பலர் கோயிலுக்குப் போனால் தீபாராதனை கண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதோடு நிற்பதில்லை. அந்தக் கோயிலில் என்ன என்ன விக்கிரகங்கள் இருக்கின்றன, என்ன சிற்பங்கள் இருக்கின்றன என்று சிறிது ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள். பிறகு மறுபடியும் வந்து, "இதுவரையில் இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தது பிசகு' என்று கன்னத்திலும் போட்டுக் கொள்கிறார்கள்.

கோவிலில் உள்ள கலை அழகை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை அன்பர் பாஸ்கரன் அவர்களுடைய கட்டுரை நன்றாக நமக்குக் காட்டுகிறது. அவர் எழுதும் கட்டுரைகளைப் படித்தால் நாமே அவருடன் அங்கங்கே சென்று எல்லாவற்றையும் காண்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.