பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

69

உருவாக்கி அவரை ஒரு மடத்தில் கிடத்தி யிருக்கிறார்கள். படை எடுத்து வந்த முஸ்லிம் வெறியர்கள் கோயிலுள் நுழைந்ததும் அந்தச் சிறுரங்கநாதரே அங்கு கோயில் கொண்டிருப்பவர் என்று காட்டியிருக்கிறார்கள். 'ஓ! இது என்ன சோட்டா சாமி' என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு மேல் நடந்திருக்கிறார்கள் வந்தவர்கள். இப்படித்தான் இந்தச் சோட்டா சாமியாம் கஸ்தூரி ரங்கநாதர் மோட்டா சாமியாம் உத்தர ரங்கநாதரைக் காப்பாற்றியிருக்கிறார். இதைப்போலவே இன்னொரு கதை, திருச்சேறை என்ற தலத்திலே கோயில் கொண்டிருப்பவர் சாரநாதன்.

இந்தச் சாரநாதன் கோயிலிலே முன் மண்டபத்திலே ஒரு சிறு கோயில் ராஜகோபாலனுக்கு, இந்த ராஜகோபாலனே சாரநாதன் கோயில் உருவாவதற்குக் காரணமாக இருந்திருக்கிறான் என்பது வரலாறு. கதை இதுதான். தஞ்சையை ஆளுகிறான் அழகிய மணவாள நாயக்கன். இவன் மன்னார்குடியில் ராஜகோபாலன் கோயில் கட்டுவதில் முனைந்திருக்கிறான், தஞ்சை ஜில்லாவில் கல் கிடைப்பது அரிதாயிற்றே! அதற்காக வடக்கே எங்கிருந்தோ வண்டிகளில் கல் கொண்டுவர ஏற்பாடு செய்திருக்கிறான்.

நாயக்க மன்னனின் மந்திரி நரச பூபாலனுக்குச் சாரநாதனிடம் ஈடுபாடு. அந்தச் சாரநாதனுக்குத் திருச் சேறையில் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை. ஆதலால் மன்னார்குடிக்குச் செல்லும் கற்களில் வண்டிக்கு ஒரு கல்லைத் திருச் சேறையில் இறக்க உத்தர விடுகிறான். அரசர் பெருமக்களை அடுத்துத்தான் கோள் சொல்பவர்கள் இருப்பார்களே. அவர்களில் ஒருவன் மன்னனின் பணத்தையெல்லாம் மந்திரி திருச்சேறை சாரநாதனுக்குக் கோயில் கட்டுவதில் செலவு செய்கிறான் என்று கோள் சொல்லுகிறான்.

வே.மு.கு.வ - 6