பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

73

க்ஷேத்திரத்தில் சார புஷ்கரணியின் கரையிலுள்ள அரச மரத்தடியில் இருந்து தவம் புரிகிறாள். அவள் தவத்துக்கு இரங்கி அந்த நாராயணன் தை மாதத்தில் புஷ்ய நக்ஷத்திரமும் குருவாரமும் பௌர்ணமியும் கூடிய சுபதினத்தில் ஒரு மதலையாய் அவதரித்து, காவிரித் தாயின் மடியில் தவழ்கிறான். அந்தக் குழந்தையே நாராயணன் எனக் காவிரி அறிகிறாள். அவள் விரும்பிய கருடாரூடராய் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய்க் காட்சி தருகிறார். காவிரியும் அதுதான் சமயம் என்று மூன்று வரங்கள் கேட்டுப் பெறுகிறாள்.

பகவான் அந்தச் சாரக்ஷேத்திரத்திலேயே நித்ய வாசம் செய்ய வேண்டும் என்பது ஒன்று. அந்தத் தலத்திலே வாழ்கிற சகல உயிர்களுக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் என்பது மற்றொன்று. தனக்குக் கங்கையினும் மேம்பட்ட பதவி வேண்டும் என்றும் வேண்டுகிறாள். காவிரி காரியவாதிதான். ‘கங்கையிற் புனிதமாய காவிரி' என்று ஆழ்வார்களால் பாடப் பெறும் பேறு பெற்று விடுகிறாளே. அதற்குத் தகுதியுடையவள் தான். கங்கை பரந்தாமனது கால்களைக் கழுவித் தானே புனிதம் அடைகிறாள்! இவளது மடியிலே அல்லவா அவன் தவழ்ந்து விளையாடியிருக்கிறான். இவள் புகழ் அடைவதற்குக் கேட்பானேன்! ஆகவே புஷ்கரணியின் கரையிலுள்ள காவிரித்தாய்க்கே நமது முதல் வணக்கம். இந்தப் புஷ்கரணியின் கீழ்க் கரையில் அனுமாரும் வடகிழக்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வாரும் சிலா உருவத்தில் இருக்கிறார்கள், இவர்களையுமே வணங்கி விட்டு மேல் நடக்கலாம்.

புஷ்கரணியின் மேல் கரையிலே ராஜகோபுரம் சுமார் 120 அடி உயர்ந்து நிற்கிறது. இந்தக் கோபுரத்தைக் கடந்தே முதல் பிரகாரத்துக்குச் செல்ல வேணும். அங்கு இடை நிலைக் கோபுரம் வேறே இருக்கிறது. அதையும் கடந்தே இரண்டாம் பிரகாரம். அதை அடுத்தே கல்யாண மண்டபம். இந்த மண்டபத்தின் வடபக்கத்திலே தான் முன் சொன்ன ராஜகோபாலன் சந்திதி. அந்த ராஜகோபாலனையும் முந்திக்