பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

75

வந்திக்கும், மற்றவர்க்கும் மாசுடம்பில்
வல் அமணர் தமக்கும் அல்லேன்,
முந்திச் சென்று அரி உருவாய் இரணியனை
முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்,
சந்தப் பூ மலர்ச்சோலை தண் சேறை .
எம் பெருமான் தனை நாளும்
சிந்திப் பார்க்கு என்னுள்ளம் தேனாகி
எப் பொழுதும் தித்திக்குமே..

என்ற பாடல், நமக்கும் தித்திக்கவே செய்கிறது. சாரநாதனைச் சிந்திப்பதிலேயே இனிமை கண்டவன் மங்கை மன்னன். அந்தப் பேராளன் பேரோதும் பெரியோர் வரிசையிலே பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் இடம் பெறுகிறார். தமிழ் எதற்குப் பயன்பட வேண்டும்? உணவுக்கும் உடைக்கும் இரந்து நிற்பதற்குத்தானா? இல்லை, சேறை வாழ் சாரநாதன் பேர் சொல்ல உதவினால்தான் அந்தத் தமிழ் இனிக்கும் என்கிறார் அவர்.

சென்று சென்று செல்வம்
செருக்கு வார் வாயில் தொறும்
நின்று நின்று தூங்கும் மட
நெஞ்சே; - இன் தமிழைக்
கூறைக்கும் சோற்றுக்கும்
கூறாதே, பேறு ஆக
சேறைக்கு நாயகன் பேர் செப்பு

என்கிறார்; நம்மையுமே கூவி அழைக்கிறார்.

ஊரை விட்டுக் கிளம்பு முன், ஊருக்கு வடபுறம் கொஞ்சம் ஒதுங்கி வாழ்கின்ற சிவ பெருமானையும் தரிசித்துவிட்டே. புறப்படலாமே. நெடுஞ்சாலைக்கு வடபுறம் கொஞ்சம் இறங்கி மேற்கு நோக்கி நடந்தால் செந்நெறி அப்பர் ஞானவல்லியுடன் இருக்கும் கோவிலுக்கு வந்து சேரலாம்.