பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தக் கட்டுரைகளை இப்போது தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவது மிகவும் உபகாரமான காரியம். இது மூன்றாம் தொகுதி.

தொண்டைமானவர்கள் ஒவ்வொரு கோயிலாக நமக்கு அறிமுகப்படுத்தும் பாணி அவருக்கு என்றே அமைந்தது. ஊருக்குச் செல்லும் வழிகளைச் சொல்லி அழைத்துச் சென்று கோயில் முன் நிறுத்துகிறார். கோபுரம் முதலிய அமைப்புகளைக் காட்டுகிறார். புராணக் கதைகளை ரசமாகச் சொல்கிறார். அங்கே உள்ள சிற்பவடிவங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுகிறார். தேவாரத்தையும் திவ்யப் பிரபந்தத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

புராணங்களில் காணாத பலகதைகளையும் வழக்கங்களையும் பழமொழிகளையும் அங்கங்கே சொல்கிறார். இது மிக மிகப் பயனுள்ள தொண்டு சொல்வதைச் சுவைபட நுட்பமான நகைச் சுவை சில இடங்களில் மலர, சொல்கிறார்.

இந்தத் தொகுதியில் நாம் எத்தனையோ மூர்த்திகளைத் தரிசித்துக் கொள்கிறோம்; எத்தனையோ தீர்த்தங்களில் நீராடுகிறோம், புராண புருஷர்களையும் சரித்திரத்தில் வரும் மக்களையும் சந்திக்கிறோம். 'கட்டுரையின் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் கச்சிதமாக அமைந்து ஒரு சிற்ப வடிவைப்போலக் கட்டுரையை ஆக்குகின்றன.

தலங்களைப் பற்றிப் பல நுட்பமான உண்மைகளையும், மூர்த்திகளின் அமைப்பிலுள்ள சிறப்பான பகுதிகளையும் சொல்கிறார். இவற்றை, பல முறை அவற்றைத் தரிசித்தவர்கள் கூட அறிந்து கொள்வதில்லை.

குடந்தைக் கீழ்க் கோட்டமாகிய நாகேசுவரன் கோயிலில் சித்திரை மாதத்தில் மூன்று நாட்களில் சூரியன் கருவறையில் தன் கதிர்களை வீசுகிற உண்மையை ஓரிடத்தில் சொல்கிறார்; கும்பேசுவர சுவாமி கோயிலில் உள்ள அம்பிகை மந்திர பீடேசுவரி